மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை : கட்டுமானப் பணி துவங்கியது !

மதுரை மாவட்டம், தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். மருத்துவமனையில் 150 படுக்கைகளைக் கொண்ட தொற்று நோய் பிரிவை துவக்கும் வகையில் திட்ட மதிப்பீடு 1,977.8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

ஜப்பானின் ‘ஜெய்க்கா’ பன்னாட்டு கூட்டுறவு முகமை நிறுவனத்துடன் 2021 மார்ச்சில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்த தொகையில் 82 சதவீதம் ஜெய்க்கா நிறுவனம் கடனாக தருவதாகவும் மீதி 18 சதவீதத் தொகையை மத்திய அரசு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஜெய்க்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெற்று 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. 2023 ஆகஸ்ட் 17ல் கட்டுமானத்திற்கான ‘டெண்டர்’ அறிவிப்பை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. ஜனவரி 29ல் சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு, மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பம் அனுப்பியது.

ஏழு தளங்கள், 870 படுக்கை வசதிகளுடன் அவசர சிகிச்சை பிரிவு, தொற்று நோய் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக கட்டடம் அமைக்கப்படும். மேலும் நான்கு தளங்கள், 50 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவப் பிரிவும் அமைகிறது. பிரமாண்ட அரங்கம், இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு தனி விடுதி, நூலகம் உட்பட மொத்தம் 2 லட்சத்து 851 சதுரடியில் பல வசதிகளுடன் எய்ம்ஸ் வளாகம் அமைய உள்ளது.

மத்திய சுகாதாரத்துறையின் ஒப்புதலுக்கு பின், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட எல் அண்டு டி நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தினர் வாஸ்து பூஜை செய்து கட்டுமான பணிகளை நேற்று முதல் துவக்கினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top