விருது வழங்கும் விழாவில் தமிழக பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய பிரதமர் மோடி!

தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, விருது பெற வந்த தமிழகத்தை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி என்ற பெண்ணின் காலைத் தொட்டு வணங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த ‘தேசிய படைப்பாளிகள் விருது’களை வெற்றியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) வழங்கினார்.

நாட்டின் வலிமை மற்றும் கலாசாரத்தை சர்வதேச அளவில் பரப்ப உதவியவர்கள், பசுமை சாம்பியன்கள், தூய்மைத் தூதர்கள், வேளாண் படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்பப் படைப்பாளிகள் என சுமார் 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.

அப்போது கீர்த்திகா கோவிந்தசாமி என்பவருக்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். அப்போது, அந்த பெண் பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார். பதிலுக்கு பிரதமர் மோடியும் அப்பெண்ணின் காலை மூன்று முறைத் தொட்டு வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

‘சிறந்த கதை சொல்பவர்’ விருதை பெற்ற கீர்த்திகா கோவிந்தசாமி, தமிழகத்தை சேர்ந்தவர். அவர் வரலாற்றுத்  தகவல்களை யூடியூப் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி வந்தார்.

விருதுகளை வழங்கிய பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

இன்று தேசிய படைப்பாளிகள் விருது பெற்றவர்களை வாழ்த்துகிறேன். உங்கள் அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சுமார் 1.5 முதல் 2 லட்சம் படைப்பாளிகள் இந்த தேசிய படைப்பாளிகள் விருது திட்டத்தில் இணைந்துள்ளனர். மஹா சிவராத்திரி தினத்தில் முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது வழங்கப்பட்டிருப்பது தற்செயலாக அமைந்துள்ளது.

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காஸ் சிலிண்டர் விலையில் ரூ.100 குறைத்துள்ளேன். விருது பெற்றுள்ள உங்களின் படைப்புகள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நீங்கள் அனைவரும் இணையத்தின் ‘மிகவும் மதிப்புமிக்க நபர்’ (எம்.வி.பி) ஆகிறீர்கள். படைப்புகள் டிஜிட்டலுடன் ஒன்றிணையும்போது மாற்றங்கள் வரும். எனது நாட்டின் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாட்டு மக்களை நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top