குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று (மார்ச் 11) முதல் அமலுக்கு வந்த நிலையில், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது. விரைவில் செல்போன் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து நமது பாரத நாட்டிற்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் நோக்கோடு சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச்சட்டம் 2019ல் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டத்திற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பல்வேறு போராட்டங்களை செய்தது. ஆனால் இந்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அப்போதே மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், சிஏஏ சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த சட்டத்தின் கீழ் அகதிகளாக வந்தவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
குடியுரிமை வேண்டுவோர் indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், விரைவில் செல்போன் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.