ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் தனது அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இன்று (மார்ச் 14) சமர்ப்பித்தனர். 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைக்கு தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்த குழு பரிந்துரைத்துள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தலை நடத்தும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழுவை நியமித்தது.
இந்தக் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழுவுக்கு பொதுமக்கள் இடம் இருந்து சுமார் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட கடிதங்கள் வரப்பெற்றது. இது தொடர்பாக 191 நாட்களாக ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் தங்களது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தனர். 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குழுவில் இடம் பெற்ற பரிந்துரைகளை பார்ப்போம்:
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தவும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் குழு பரிந்துரை செய்துள்ளது.
5 ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவு பெறுவதற்குள் தொங்கு சட்டசபை அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அரசு கவிழ்ந்தால், மீதமுள்ள காலத்திற்கு மட்டும் புதிய தேர்தலை நடத்தலாம்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்யத் தேவையில்லை.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு மட்டுமே அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் முதல் முறையாக ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தும்போது, 5 ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவு பெறாமல் இருக்கும் மாநில அரசுகள் கலைக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, 2029-ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தத் திட்டமிடப்பட்டால் வருகிற 2026, 2027 மற்றும் 2028ல் சட்டசபைத் தேர்தல்களை எதிர்கொள்ள உள்ள மேற்குவங்கம், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2029 வரை மட்டுமே இருக்கும்.
பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் கமிஷன், மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.