புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை வரும் 21ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் உயர்மட்ட குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், மத்திய அமைச்சர் இடம் பெறுவர் என மத்திய அரசு கடந்தாண்டு சட்டம் இயற்றியது. இந்த குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சேர்க்கப்படவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இச்சூழ்நிலையில் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இன்று அவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான, புதிய சட்டத்திற்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்கு , பொதுவாக எந்தவொரு சட்டத்திற்கும் இடைக்கால உத்தரவு மூலம் தடை விதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது. இதற்காக தனியாக மனு தாக்கல் செய்யுங்கள் எனக்கூறி வழக்கை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.