‘ஊழல் குறித்த எண்ண ஓட்டத்தை மக்களிடம் மாற்றியுள்ளோம்’- என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரைசிங் பாரத் என்ற இரண்டு நாட்கள் மாநாட்டை டெல்லியில் நியூஸ் 18 குழுமம் நடத்தி வருகிறது. கடந்த (மார்ச் 19) காலை 10.30 மணிக்கு மாநாடு தொடங்கி முதல் நாள் அமர்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் நாளான நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசினர். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
மாநாட்டில் பேசிய அவர், மூன்றாவது ஆட்சி காலத்தில் முதல் 100 நாட்களுக்கு பணித்திட்டங்களை தயாரித்துள்ளோம் என்று கூறினார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. வாழ்க்கையில் ஊழல் ஒரு பகுதி என ராஜீவ் காந்தி கூறினார், ஊழல் குறித்த மக்களின் எண்ண ஓட்டத்தை பாஜக தலைமையிலான அரசு மாற்றியுள்ளது. எதிர்க்கட்சிகளிடம் குவியல் குவியலாக பணம் சிக்குகிறது. ஆனால் மோடியின் உத்தரவாதத்திற்கு விளம்பரம் தேவையில்லை ,என எதிர்க்கட்சியை விமர்சித்தார்.
அதுமட்டுமின்றி, தேசிய ஜனநாயக கூட்டணியின் திட்டங்கள் ஒவ்வொரு மக்களையும் சென்று சேர்க்கின்றன, நடுத்தர வகுப்பினரை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ரியல் எஸ்டேட் துறையில் நிலவிய ஊழலுக்கு முடிவுகட்டி சீர்படுத்தியுள்ளோம்; விண்வெளி மற்றும் ஸ்டார்ட்அப் துறையில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக விளங்குகிறது என்று பெருமிதம் கூறினார்.