டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம் என்று சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரது கைது செய்யப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர். ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்தவர் மதுபான ஊழலில் ஈடுபட்டுள்ளாரே என்று டெல்லி மக்கள் ஆம் ஆத்மி மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். ஆனால் சில எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே பாஜக அரசு கைது செய்துவிட்டதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இதற்கு அன்னா ஹசாரே சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே கூறியதாவது; நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். கெஜ்ரிவால் என்னுடன் இணைந்து பணியாற்றியவர். மதுவுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தற்போது அவரே மதுபானக் கொள்கைகளை வகுத்து வருகிறார். அவர் கைது செய்யப்பட்டதற்கு அவரது செயல்களே காரணம்.
டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்கும் திட்டம் பற்றி அறிந்து கெஜ்ரிவாலுக்கு நான் கடிதம் எழுதினேன். ஓர் அரசாக முடிவு எடுப்பது உங்கள் உரிமை. ஆனால் சமூகத்தில் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் மதுபானத்தில் நீங்கள் ஏன் கவனம் செலுத்துகிறீர்கள்? சமூகத்தில் மற்ற பிரச்சினைகள் உள்ளன. மது மிக மோசமானது. மதுபானம் குறித்து கொள்கையை உருவாக்குவது முறையா என்று அவரிடம் கேட்டிருந்தேன்.
என்றாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இறுதியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அவரது செயலே காரணம். அவர் மதுபானக் கொள்கையை உருவாக்கவில்லை என்றால் கைது செய்யப்படும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.