ஏழைகளிடம் கொள்ளையடித்த பணம் மீண்டும் அவர்களுக்கே கிடைக்க பணியாற்றி வருகிறேன்! பிரதமர் மோடி!

மேற்கு வங்கத்தில் ஏழை மக்களிடம் இருந்து, 3,000 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த பணம், ஊழல்வாதிகளிடம் இருந்து அமலாக்கத் துறை பறிமுதல் செய்த சொத்துகள் மற்றும் பணத்தின் வாயிலாக, மீண்டும் அவர்களுக்கே கிடைக்க பணியாற்றி வருகிறேன், என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு மக்கள் நலத்திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இங்கு வரும் 19ம் தேதி துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது.

மொத்தமுள்ள 42 தொகுதிகளில், கடந்த முறை 18 தொகுதியில் வென்ற பாரதிய ஜனதா கட்சி, இந்த முறை அதைவிட கூடுதலான தொகுதிகளை கைப்பற்ற தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது. மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியில், திரிணமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ராவை எதிர்த்து, பாஜக சார்பில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ‘ராஜமாதா’ என்றழைக்கப்படும் அம்ரிதா ராய் போட்டியிடுகிறார். சமீபத்தில், அம்ரிதா ராயிடம் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அப்போது அவரிடம் பிரதமர் மோடி கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏழை மக்களிடம் இருந்து 3,000 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர். இப்படி கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை, அங்குள்ள ஊழல்வாதிகளிடம் இருந்து அமலாக்கத் துறையினர் கைப்பற்றிய சொத்துகள் மற்றும் பணத்தின் வாயிலாக, மீண்டும் ஏழைகளுக்கே கிடைக்க பணியாற்றி வருகிறேன். இதற்கான சட்ட வழிகளை நான் ஆராய்ந்து வருகிறேன்.

ஆம் ஆத்மிக்கு எதிராக போராடியவர்கள், தற்போது அதிகாரத்திற்காக ஆம் ஆத்மியுடன் கூட்டுச் சேர்ந்து உள்ளனர். ஊழல்வாதிகள் அனைவரும் தங்களது குடும்ப நலனுக்காக ஒன்று சேர்ந்துள்ளனர். திரிணமுல் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறது. அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வர். இவர்களுக்கு வரும் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவர். பாஜக தலைமையிலான கூட்டணி, இளைஞர்களின் பிரகாசமான எதிர் காலத்திற்காகவும், ஊழலற்ற நாட்டிற்காகவும் போராடுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர், ஒவ்வொரு பாஜக வேட்பாளரையும் தொடர்பு கொண்டு, களநிலவரம் மற்றும் மக்களின் எண்ண ஓட்டங்கள், அத்தொகுதிக்கு என்ன தேவை என்பதை கேட்டறிந்து வருகிறார். இதனால் வேட்பாளர்கள் இன்னும் உற்சாகமாக களப்பணி ஆற்ற பிரதமர் உத்வேகம் அளிக்கிறார் என்றே சொல்லலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top