போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் நேற்று (ஏப்ரல் 02) தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வதாக ஏமாற்றி ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இப்படி போதைப்பொருள் கடத்தலில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஜாபர் சாதிக் சுருட்டி இருப்பதும், அந்த பணத்தில் சினிமா தயாரிப்பு மற்றும் ஓட்டல் துவங்கியது, அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்கியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் பின்னணி பற்றி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர் அவரோடு சேர்ந்து ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்கிற திரைப்படம் ஒன்றையும் தயாரித்து வந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளராக ஜாபர் சாதிக்கும் இயக்குனராக அமீரும் இருந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டல் ஒன்றையும் இருவரும் கூட்டாக தொடங்கி நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி அதிகாரிகளிடம் பிடிபட்டார். இதனால் இயக்குனர் அமீருக்கும், ஜாபர் சாதிக்குக்கும் எந்த மாதிரியான தொடர்புகள் இருந்தன? என்பது பற்றி இயக்குனர் அமீரிடம் டெல்லியில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
இதற்காக சம்மன் அனுப்பி இயக்குனர் அமீரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேரில் வரவழைத்திருந்தனர். டெல்லியில் உள்ள போதைப்பொருள் அலுவலகத்துக்கு நேற்று (ஏப்ரல் 02) காலை 10 மணி அளவில் அமீர் சென்று இருந்தார்.
அமீரிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் 11.30 மணி அளவில் விசாரணை தொடங்கிய நிலையில், அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். இரவு 10.20 மணிக்கு அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது. இதன் மூலம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர்.
இதை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது பற்றிய ஆலோசனையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, அமீர் மீது கைது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அமீர் சென்னை திரும்பியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் பலருக்கு சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சினிமா மற்றும் அரசியலில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ள அதிகாரிகள், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளனர். விரைவில் இதில் திமுகவின் முக்கியப்புள்ளிகள் சிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஜாபர் சாதிக் சென்னையில் இருந்துதான் போதைப் பொருட்களை கொரியர் மூலமாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.