ஏழைகளுக்கு இலவச உணவு தானியம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம்! பாஜக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சம்ங்கள்!

மக்களவைத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை நேற்று (ஏப்ரல் 14) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெளியிடப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல், மக்கள் மருந்தகங்களில் 80% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தயார் செய்தது. 27 பேர் கொண்ட அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றிருந்தார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையினை வெளியிட்டனர்.

அம்பேத்கர் பிறந்த நாளில் தேர்தல் அறிக்கை வெளியானது. மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களில் பயன்பெற்ற நபர்களுக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசின் வெற்றித் திட்டங்கள் குறித்த வீடியோ வெளியானது.

பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்; வளர்ச்சிக்கான இந்தியா என்ற வகையில் இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். உலகம் முழுவதும் போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் வலுவான, நிலையான அரசு அமைய வேண்டும். அப்போதுதான்போர் நடக்கும் இடங்களில் இருந்து இந்தியர்களை மீட்க முடியும் என்றார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் விவரம் வருமாறு;

* 2025ம் ஆண்டு பழங்குடியினரின் பெருமை ஆண்டாக கடைப்பிடிக்கப்படும்.
* நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்.
* ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்.
* இலவச ரேசன் பொருள் மேலும் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்
* மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்
* பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்
* பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம்.
* உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும்.
* தமிழ்மொழியை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு.
* முத்ரா கடன் உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
* ஏழைகளுக்கு ஊட்ட சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும்.
* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்து கொள்ளலாம். திருநங்கைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
* வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* குறைந்த விலையில் பைப் மூலமாக காஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடி உடன் மருந்துகள் கிடைக்கும்.
* சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
* கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
* 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* பெண்களுக்கு ரூ.1க்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.

* மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* மலைவாழ் மக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு தேவையான உதவிகள்.
* லாரி ஓட்டுநர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு மையம்.
* புல்லட் ரயில் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
* நிலவில் மனிதன் தரையிறங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* வந்தே பாரத் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும்.

* 25 கோடிக்கு அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்பு
* 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற இலக்கு.
*  வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை
* இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை.
* ஊழலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top