தருமபுரியில் ஆளும் கட்சிக்கு சாதகமான ஊடகங்களுக்கு மட்டும் தேர்தல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் மற்ற செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் 19 தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்கள், வேட்புமனுத்தாக்கலுக்கு முன்பாகவே, தேர்தல் அடையாள அட்டைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் சென்று புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் பணியாற்றும் செய்தி நிறுவனங்களின் பரிந்துரை கடிதம் ஆகியவைகளை வழங்கினர்.
இதன் பின்னர் மீண்டும் ஏப்ரல் 15 அல்லது 17ம் தேதி தேர்தல் அடையாள அட்டை வழங்கப்படும் என பிஆர்ஓ அலுவலகத்தில் பணியாற்றும் முனிராஜ் என்பவர் தகவல் அளித்தார். அதன் பேரில் இன்று (ஏப்ரல் 17) தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ஒரே நாடு பத்திரிகையின் செய்தியாளர் வ.தங்கவேல், பிஆர்ஓ அலுவலகத்திற்கு நேரில் சென்று தேர்தல் அடையாள அட்டை குறித்து கேட்டார். அதற்கு உங்களது பெயர் விடுபட்டுவிட்டது என்று அஜாக்ரதையான பதிலை முனிராஜ் என்ற ஊழியர் தெரிவித்தார். இதே போன்று பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களின் பெயரையும் வேண்டும் என்றே நிராகரித்துள்ளனர்.
ஆளும் கட்சியை சேராதவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வந்தால் அவர்கள் செய்யும் தில்லு, முல்லு வேலைகளை மக்களுக்கு அம்பலப்படுத்துவார்கள் என்ற அச்சத்தில் ஆளும் கட்சி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே திமுகவிற்கு சாதகமாக செயல்படும் ஊடகங்களுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் பி.ஆர்.ஓ., அடையாள அட்டை வழங்குவதற்கு ரகசிய உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் பேரிலேயே ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள பத்திரிகைகளில் இருந்து அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதம் மற்றும் ஆதார் அட்டை நகல், புகைப்படத்தை குப்பையில் வீசி எறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான சாந்தி மற்றும் பிஆர்ஓ மோகன் மீது தலைமைத் தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பத்திரிகையாளர்களின் கோரிக்கையாகும்.
ஆர்என்ஐ வாங்கப்பட்டு முறைப்படி வெளியிடப்படும் பத்திரிகைகள் மற்றும் வார இதழ்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்படுவதற்கான சான்றாகும். எனவே மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை மற்றும் பிற சலுகைகள் இவர்களுக்கு வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.