பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் W.H. சங்கர சுப்பிரமணியன் நேற்று (19.04.2024) நள்ளிரவில் திடீரென்று ஏற்பட்ட மாரடமைப்பால் காலமானார். அவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1961ல் பிறந்த அவர் வேலூரில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு வேலூர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஜில்லா கார்யவாஹ் ஆக சங்கப் பணி புரிந்தார். பின் 1990ல் தனது வேலையை துறந்து, நாட்டுக்கு என பிரம்மச்சாரியாக வாழும் வகையில் தன்னை
ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முழு நேர ஊழியராக ( பிரச்சாரக்காக ) இணைத்துக் கொண்டார். 1990 முதல் 93 வரை சென்னை பாக் பிரச்சாரக்; 93 முதல் 97 வரை வேலூர் ஜில்லா பிரச்சாரக்; 97 முதல் 99 வரை தர்ம ஜாக்கரன் மாநில அமைப்பாளர்; 97 முதல் பாரதிய மஸ்தூர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் தற்போது அகில பாரத செயற்குழு உறுப்பினராக (அமைப்பு சாரா பிரிவுகள் பொறுப்பு) இருந்தார்.
அன்னாரின் பூத உடலானது இன்று காலை முதல் (ஏப்ரல் 20) சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு வரை சென்னை சக்தி கார்யாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அகில பாரத பொதுச் செயலாளர் அவரது பூத உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அது போல பாரதி மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத அமைப்புச் செயலாளர் சுரேந்திரா கலந்து கொண்டு அஞ்சலி உரை நிகழ்த்தினார். சங்கர சுப்ரமணியனின் தங்கை, தம்பி, அவரால் கல்வி உதவி செய்யப்பட்ட மாணவ மாணவியர், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் பொறுப்பாளர்கள், சகோதர இயக்கப் பொறுப்பாளர்கள் அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலியைத் தொடர்ந்து அவரது உடல் மருத்துவப் படிப்பிற்காக அவரது குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் உரிய முறையில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேக தானம் செய்யப்பட்டது. இதற்கு முன்னர் நீண்ட நாட்கள் சங்கத்தில் பிரச்சாரகர்களாக இருந்த சிவராம் ஜி, உத்தமராஜி ஜி ஆகியோர் உடல்களும் தேகதானம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.