திருச்சியில் ஓடும் அரசுப் பேருந்திலிருந்து இருக்கை கழன்று, அதனுடன் சேர்ந்து நடத்துநரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கே.கே.நகருக்கு நேற்று முன்தினம் அரசு நகரப் பேருந்து புறப்பட்டது. அப்போது அந்தப் பேருந்தில், ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் இருந்த இருக்கையில் எடமலைபட்டிபுதூரை சேர்ந்த நடத்துநர் முருகேசன் (54) அமர்ந்திருந்தார்.
இந்தப் பேருந்து மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து கலையரங்கம் திருமண மண்டபம் வழியாகச் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, சேதமடைந்த இருக்கை முழுவதும் கழன்றதில், பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர் முருகேசனும் சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பேருந்து பயணிகள் கூச்சலிட்டதால், ஓட்டுநர் பாஸ்கரன் பேருந்தை நிறுத்தி, காயமடைந்த நடத்துநர் முருகேசனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
பின்னர், அந்தப் பேருந்தில் இருந்த பயணிகள், வேறு பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். சேதமடைந்த பேருந்து, பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திராவிட மாடல் அரசு தற்போது பேருந்தை கூட விமானம் போல பறக்கிற மாதிரி செய்துள்ளார்களே என்ற கமெண்ட்களையும் பார்க்க முடிகிறது. மேலும், பேருந்துக்கு முன்பக்கம், பின்பக்கம் பிங்க் கலர் பெயிண்டை அடித்து விட்டால் மட்டும் போதாது. பேருந்தை சரியாக பராமரித்து வர வேண்டும். பயணிகளின் உயிருடன் விளையாடுகிறது இந்த திராவிட மாடல் அரசு என்று பொதுமக்கள் கண்டனம் தெரிவிப்பதையும் பார்க்க முடிகிறது.