காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனுமன் பாடல்கள் கேட்பது கூட குற்றமாக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது.
இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மதோபூர் தொகுதியில் பாஜக சார்பில் (ஏப்ரல் 23) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் சிலநாட்களுக்கு முன் கடைக்காரர் ஒருவர் அனுமன் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்ததற்காக கொடூரமாக தாக்கப்பட்டார்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனுமன் பாடல்களை கேட்பது கூட குற்றமாக உள்ளது. ராஜஸ்தானினும் இத்தகைய பாதிப்பு உள்ளது. ராஜஸ்தானில் முதல்முறையாக இம்முறை ராம நவமிக்கு ஷோபா யாத்திரை ஊர்வலம் நடைபெற்றுள்ளது. மக்கள் ராம்-ராம் என முழக்கமிடும் ராஜஸ்தான் போன்ற ஒரு மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்திருந்தது.
மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை உடைத்து தங்களின் சிறப்பு வாக்கு வங்கிக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்க நினைத்தார்கள்.. அதேசமயம் அரசியலமைப்பு சட்டம் இதற்கு முற்றிலும் எதிராக உள்ளது. இடஒதுக்கீடு உரிமையை தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகளுக்கு அம்பேத்கர் வழங்கினார். ஆனால் காங்கிரஸும் இண்டி கூட்டணியும் மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு வழங்க விரும்பின.
திருப்திபடுத்துதல் மற்றும் வாக்கு வங்கி அரசியல்தான் எப்போதும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக உள்ளது. 2004-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, அவர்கள் முதல் காரியமாக ஆந்திராவில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களை சேர்த்தனர்.
காங்கிரஸ் அரசு நாடு முழுவதும் செயல்படுத்த விரும்பிய முன்னோடி திட்டமாக இது இருந்தது. 2004 முதல் 2010 வரை அவர்கள் இஸ்லாமிய இடஒதுக்கீட்டை 4 முறை அமல்படுத்த முயன்றனர். ஆனால் சட்டரீதியான தடைகள் மற்றும் உச்ச நீதிமன்ற எச்சரிக்கை காரணமாக அமல்படுத்த முடியவில்லை.
2011-ல் இதை நாடு முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்பியது. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகளை மற்றவர்களுக்கு வழங்க விரும்பியது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனத் தெரிந்தும் காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டது. இவ்வாறு அவர் பேசினார்.