வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) அதிரடியான தீர்ப்பு வழங்கி உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல்வேறு கட்டங்களாக வழக்கின் மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்.26) தீர்ப்பு வழங்கியது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, மற்றும் தீபாங்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு விதமான தீர்ப்புகளை வழங்கி உள்ளது. இருப்பினும் இரண்டு தீர்ப்புகளும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகும் வகையில் ஒரே சாரம்சத்தை கொண்டதாக காணப்படுகின்றன.
அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரி தாக்கல் செய்த அனைத்து மனுக்கள் மற்றும் வாக்குச்சீட்டு நடைமுறையை மீண்டும் அமல்படுத்தக் கோரிய மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து வாக்குச் சாவடி முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னங்கள் பொருத்திய இயந்திரங்கள் சீல் வைக்கப்பட வேண்டும், தேர்தல் முடிந்த பின் அடுத்த 45 நாட்களுக்கு அவை சீலிடப்பட்ட அறையில் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் மற்றும் விவிபாட் இயந்திரம் ஆகியவைகள் தயாரிக்கப்பட்ட நிறுவனங்களின் பொறியாளர்களால் குளறுபடிகள் ஏதேனும் நிகழப்பட்டு உள்ளதா என மறுசரிபார்ப்ப்பு பணிகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு எழுத்துப்பூர்வ அறிக்கையாக சமர்ப்பிக்கபட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வாறு பணியாற்றுகிறது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வாக்குப்பதிவு மையத்தில் வைக்கப்படும் கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் அதாவது வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரங்களில் தனித்தனியாக மைக்ரோகண்ட்ரோலர்கள் உள்ளன என்றும் அதற்கான மெமரி புரோகிராம் செய்யப்பட்டதும் அழிக்கப்படுவதால் அதில் மனித தலையீடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், இவிஎம் மற்றும் விவிபாட் இயந்திரங்களில் பொருத்தப்படும் மைக்ரோகன்ட்ரோலர்கள் ஒரு முறை புரோகிராம் செய்யப்பட்டது என்பதால் அதை மாற்றவோ அல்லது மனிதர்களால் அணுகவோ முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இனிமேல் ஆவது எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பழி சுமத்துவதை விட்டுவிட்டு, ஊழல்கள் செய்யாமல் மக்களின் அன்பை பெற்றால் அவர்களே உங்களுக்கு வாக்களிப்பார்கள். அதை விட்டுவிட்டு சும்மா தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டு ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பழியை போட்டு தப்பிக்கும் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பது மட்டும் உறுதி.