‘‘நம் நாட்டை ஆண்ட மன்னர்கள், பேரரசர்களை அவமதிக்கும் காங்கிரஸ் இளவரசர் ராகுல், தாஜா செய்யும் வாக்கு வங்கி அரசியலுக்காக நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாட்ஷாக்கள் செய்த அட்டூழியங்கள் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்,’’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. முதல் கட்டமாக, 14 தொகுதிகளுக்கு கடந்த 26ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மீதியுள்ள 14 தொகுதிகளுக்கு, மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த தொகுதிகளுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 28) பிரதமர் நரேந்திர மோடி நான்கு இடங்களில், எட்டு தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடந்த பொது கூட்டங்களில் பங்கேற்று பேசினார். பெலகாவி, சிக்கோடி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெலகாவியிலும்; உத்தர கன்னடா, தார்வாட், உடுப்பி – சிக்கமகளூரு வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிர்ஷியிலும்; தாவணகெரே, ஹாவேரி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தாவணகெரேவிலும்; பல்லாரியிலும் வாக்கு சேகரித்தார்.
இந்த கூட்டங்களில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நம் மன்னர்களும், பேரரசர்களும் இரக்கமற்றவர்கள் என காங்கிரஸ் இளவரசர் ராகுல் விமர்சித்துள்ளார். ஏழைகளின் சொத்துகளை அவர்கள் பறித்து கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசப்பற்றுக்கும், மிக சிறந்த நிர்வாகத்துக்கும் இன்றும் உதாரணமாக விளங்கும் சத்ரபதி சிவாஜி, ராணி சென்னம்மா போன்றோரை அவமதித்துள்ளார். மைசூரு அரச குடும்பத்தினர் அளித்த பங்களிப்பு குறித்து அவருக்கு தெரியாதா? நம் மன்னர்களையும், பேரரசர்களையும் அவமானப்படுத்தும் ராகுல், நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாட்ஷாக்கள் குறித்து பேச மறுப்பது ஏன்? தன் வாக்கு வங்கியை திருப்திப்படுத்துவதற்காக, காங்கிரஸ் இளவரசர் கவனமாக பேசி உள்ளார்.
ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்த முகலாய பேரரசர் அவுரங்கசீப் செய்த மோசமான செயல்களை காங்கிரஸ் மறந்து விட்டது. அதனால் தான் அவுரங்கசீபை புகழும் கட்சிகளுடன் இவர்கள் கூட்டணி அமைக்கின்றனர்.
நாடு சுதந்திரம் பெற்ற நாளன்றே, 500 ஆண்டுகளாக கட்டாமல் இருந்த ராமர் கோவிலை கட்டுவதற்கு முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த முடிவை எடுப்பதற்கு, இந்த 54 அங்குல மார்பு கொண்டவன் வர வேண்டியதாயிற்று.
ராமர் கோவில் கட்டுவது புனிதமான செயல். அந்த புனிதமான செயலை செய்ய ஓட்டு போட்ட நீங்களே புண்ணியவான்கள். ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடுத்த இஸ்லாமியர்களும் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்றனர். ஆனால், கொடூர மனம் கொண்ட காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் வரவில்லை. பாலராமர் பிரதிஷ்டை விழாவை புறக்கணித்த காங்கிரசாரை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.