ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள அகில பாரத கிராஹ பஞ்சாயத்து எனப்படும் (அகில பாரத நுகர்வோர் பஞ்சாயத்து) அமைப்பின் தென் பாரத அமைப்பின் தொடர் முயற்சியால், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரூ.50 கட்டணத்தில் மே 2ம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஆறு மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள்.
இது குறித்து அகில பாரத நுகர்வோர் பஞ்சாயத்து அமைப்பின் தென் பாரத அமைப்பாளர் எம்.என்.சுந்தர் நம்மிடம் கூறியதாவது:
பஞ்ச பூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அக்னித் தலமாக விளங்குகிறது., லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்து பக்திப் பரவசம் அடைந்து வருகிறார்கள். கடந்த சித்ரா பௌர்ணமி அன்று சுமார் 30 லட்சம் பேர் கிரிவலம் செய்தார்கள். சாதாரண நாட்களிலேயே கூட பல்லாயிரக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்வது பெருகிக்கொண்டே வரும் இந்த தருணத்தில், மாநில தலைநகரம் சென்னையிலிருந்து நேரடியாக திருவண்ணாமலைக்கு அகல ரயில் பாதை பணிக்காக 2005ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட நேரடி ரயில் சேவை கடந்த 19 வருடங்களாக மீண்டும் துவங்கப்படாமலேயே இருந்து வந்த நிலையில், திருவண்ணாமலையில் கடந்த 2023ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஏபிஜிபி நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில் திருவண்ணாமலைக்கும் சென்னைக்கும் இடையே நேரடி ரயில்சேவை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களிடமும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து மூலம் பயணம் செய்ய வந்திருந்த மக்களிடமும் சுமார் 50,000 பக்தர்களிடம் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் சேவை தேவைக்காண வேண்டுகோள் கையெழுத்து பெற்று ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் ஏபிஜிபி பொறுப்பாளர்கள் நேரடியாக டெல்லிக்கும் சென்று இதனை துரிதப்படுத்தவும் முனைந்தார்கள். இதற்கிடையே திருவண்ணாமலைக்கு வந்த ஏபிஜிபியின் அகில பாரத செயலாளர் அருண்தேஷ் பாண்டே அவர்களும் திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் சேவை பணி மிக அவசியமானது எனவும் அதை ஏபிஜிபி எப்பாடுபட்டாவது நிறைவேற்றி தரும் என்றும் நம்பிக்கை அளித்தார். 2024 நிதிநிலை அறிக்கையிலும் ரூபாய் 100 கோடியை திண்டிவனத்துக்கும் திருவண்ணாமலைக்கும் இடையே புதிய ரயில்வே இருப்புப் பாதை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்பும் வெளிவந்தது.
இந்நிலையில் 2024 ஏப்ரல் 13ஆம் தேதி அன்று சென்னை பெரம்பூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வாரந்தோறும் மூன்று நாட்கள் செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் ஓட்டத்தை துவங்கியது. மேலும் ஏப்ரல் 29 அன்று ரயில்வே வாரியம், சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி நேரடி ரயில் சேவை ரூபாய் 50 டிக்கெட்டுடன் செயல்படும் எனவும் மே 2ஆம் தேதி முதல் ரயில் இயங்க தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக மே 1 அன்று திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே நிர்வாகம் ஆனது தொழில்நுட்ப காரணங்களுக்காக வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து திருவண்ணாமலைக்கு நீட்டிக்க இருந்த சேவை அடுத்த அறிவிப்பு வரை அளிக்க இயலாது என்று பத்திரிகை செய்திக்கு அனுப்பி விட்டனர். இது பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்த மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையை தென்னக ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் மே 2 ஆம் தேதி ஏபிஜிபி மாநில பொறுப்பாளர்கள் குழுவாக சென்று திருவண்ணாமலை ரயில் சேவை நிச்சயமாக ரயில்வே உத்தரவாதம் அளித்த வகையில் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதை தென்னக ரயில்வே இணை பொது மேலாளரிடம் அவசரகோரிக்கை மனுவாக ஏபிஜிபி அளித்தது. இது விஷயமாக தென்னக ரயில்வே அதிகாரிகள் குழு விரைந்து செயல்பட்டது. அதன் பலனாக திட்டமிட்ட வகையில் மே 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு 50 ரூபாய் கட்டணத்தில் மெமூ ரயில் சேவை துவங்கும் என்று தென்னக ரயில்வே மீண்டும், மே 2 மதியம் 2 மணிக்கு அறிவிப்பை வெளியிட்டது மிக்க உற்சாகமூட்டியது. இதன் காரணமாய் திட்டமிட்டபடி சென்னை கடற்கரை – திருவண்ணாமலை ரயில் சேவை மே 2, சரியாக மாலை 6 மணிக்கு, அண்ணாமலைக்கு அரோஹரா கோஷத்துடன், அலங்கரிக்கப்பட்ட ரயில், தீபாராதனையுடன் கிளம்பியது.
துரிதமாக செயல்பட்ட அனைவரையும் இந்த வேளையில் கௌரவிக்க அகில பாரத கிராஹ பஞ்சாயத்து (அகில பாரத நுகர்வோர் பஞ்சாயத்து) முடிவு செய்தது. ஆகவே ரயில் சேவை சென்னையிலிருந்தும் திருவண்ணாமலையில் இருந்தும் துவங்கிய பின், மே 4ஆம் தேதி அன்று திருவண்ணாமலையில் வெற்றி விழா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மஹாலில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. இந்த கையெழுத்து சேகரிப்பு பணியில் ஈடுபட்ட கல்வி நிறுவனங்களுக்கும் கேடயம் அளிக்க திட்டமிடப்பட்டது. பணி செய்த தொண்டர்களையும் கௌரவிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த வெற்றி விழா திருவண்ணாமலையில் இந்து சமுதாயத்தின் அனைத்து வித சங்கங்களின் வெற்றியாக இணைந்து கொண்டாடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.