சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு ரேபிஸ் நோய் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில், மாநகராட்சி பூங்காவின் காவலாளியாகவும், பராமரிப்பாளராகவும் ரகு என்பவர் உள்ளார். அதே பூங்காவில் மனைவி சோனியா, 5 வயது மகள் சுரக் ஷாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், 5ம் தேதி சிறுமி சுரக்ஷா பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, எதிர் குடியிருப்பில் இருக்கும் புகழேந்தி வளர்க்கும் வெளிநாட்டு இன இரண்டு ‘ராட்வைலர்’ நாய்கள் சிறுமியை கடித்து குதறின.
இதில், பலத்த காயமடைந்த சிறுமி, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அச்சிறுமிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், ‘ரேபிஸ்’ என்ற வெறிநாய் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கருதுகின்றனர். அவ்வாறு ஏற்பட்டால், சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்போலோ மருத்துவமனை தரப்பில் நிர்வாகிகள் கூறியதாவது:
சிறுமிக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அறுவை சிகிச்சைக்கான அனைத்து முன்பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், ‘ரேபிஸ்’ நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால், 48 மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அந்நோய் ஏற்படாதவாறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படாதபட்சத்தில், அச்சிறுமிக்கு நாளை பிற்பகலில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடந்து செல்பவர்களையும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய் கடித்து வைக்கிறது. அதே நேரத்தில் தற்போது வளர்ப்பு நாய்களும் பொது இடங்களில் அழைத்து வரும்பொழுது அங்கு உள்ளவர்களை கடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் திமுக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.