ஸ்லோவாக்கியா பிரதமராக ராபர்ட் பிகோ (59) பணியாற்றி வருகிறார். இவர் தலைநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹேண்ட்லோவா நகரத்தில் உள்ள கலாச்சார மாளிகைக்கு வெளியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்குரிய நபர் ராபர்ட் பிகோ நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
துப்பாக்கியால் சுட்டதில் ராபர்ட் பிகோ வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால் சுருண்டு விழுந்த அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், ஸ்லோவாக்கியா பிரதமர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் பிகோ விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஸ்லோவாக்கியா மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது என பதிவிட்டுள்ளார்.