சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட நூருதீன் என்பவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில், ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் மார்ச் 1ல் குண்டு வெடிப்பு நடந்தது. இதுதொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்கள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பதுங்கி இருந்த, பயங்கரவாதிகள் முஸாவீர் ஹுசைன் ஷாகிப், அப்துல் மதீன் அகமது மதீன் முகமது தாஹா, ஆகியோரை கைது செய்தனர். இருவரையும், 10 நாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.
இந்நிலையில், கைதான 2 பேர் சென்னையில் தங்கி இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி, வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்துள்ளனர். அவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அந்த இருவருக்கு உதவியவர்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் சென்னையில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில்தான், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த, இலங்கையைச் சேர்ந்த முஹம்மது ஜாகிர் ஹுசைன் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த அமீர் ஜுபைர் சித்திக் ஆகியோர் சதி செய்த விவகாரத்தில், போலி இந்திய ரூபாய் நோட்டுகள் தயாரித்து, தேச விரோத உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நூருதீன் என்பவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குண்டு வெடிப்பில் இன்னும் யார், யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை பற்றிய தகவல்கள் தெரிய வரலாம்.