2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்று அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 370-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர்;
‘‘எல்லாம் யூகமே, யார் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது’’ என்று கூறினார். ஆனால், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக வெற்றிபெறக்கூடிய இடங்கள் குறையும் என்று நான் நினைக்கவில்லை” என்று பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.
நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களான பீகார், மேற்கு வங்காளம், அசாம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குறைந்தது 240 மக்களவை இடங்கள் உள்ளன என்ற பிரசாந்த் கிஷோர், இதில் பாஜவுக்கு, 50க்கும் குறைவான இடங்களே உள்ளன என கூறினார்.
ஆனால் இன்னும், பாஜக 300 இடங்களில் வெற்றி பெறுகிறது. மேற்கு மற்றும் வட இந்திய மாநிலங்களில் 260 முதல் 270 வரையிலான இடங்களை வென்றுள்ளது.
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் 80 முதல் 100 இடங்களில் பாஜகவை தோற்கடிக்க முடியாவிடில் நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து விலக்க முடியாது.
மேலும், மக்களவை தேர்தல் முடிவுகளை கணித்த கிஷோர், வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பாஜக 100 இடங்களை இழக்கும் என நம்பவில்லை. மேலும், தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் 250 இடங்களில், பாஜகவின் வாக்கு சதவீதமும் இடங்களும் அதிகரித்து வருகின்றன என்று கிஷோர் கூறினார்.
வடக்கு மற்றும் மேற்கில் பெரிய இழப்பு இல்லை. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக தோல்வியடைந்ததாக மக்கள் கூறுவதை நம்பினாலும், பாஜக 20-30 இடங்களில் மட்டுமே பின்னடைவைச் சந்திக்கக்கூடும். ஆனால் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் அவர்கள் இந்த பல இடங்களை விட அதிகமாகப் பெறுவார்கள் என பிரசாந்த் கிஷோர் கூறினார்.