ஜூன் 4க்கு பின் ஊழல்வாதிகளின் வாழ்க்கை சிறையில்தான் : பிரதமர் மோடி அதிரடி!

“மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ம் தேதிக்கு பின் இண்டி கூட்டணியில் உள்ள ஊழல்வாதிகளுக்கு சிறை நிச்சயம்,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள மேதினிபூர், பங்கூரா உள்ளிட்ட எட்டு தொகுதிகளுக்கு 6ம் கட்டமான வரும் 25ல் மக்களவைத் தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி, அங்குள்ள புருலியா, பிஷ்ணுபூர் ஆகிய தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று (மே 19) வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தேர்தலில் வெற்றி பெற இண்டி கூட்டணி தலைவர்கள் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தினர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

மதத்தின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க அந்த கூட்டணி விரும்புகிறது. சரஸ்வதி பூஜை கொண்டாடும் மேற்கு வங்கத்தில், ஆசிரியர்கள் நியமனத்தில் திரிணமுல் காங்கிரஸ் ஊழல் செய்துள்ளது.

ஊழல் செய்தவர்கள் சிறைக்கு வெளியே இருக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4க்கு பின் ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வது நிச்சயம். அவர்கள் மீதான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், ராமகிருஷ்ண மடம், பாரத சேவஷ்ராம் சங்கத்திற்கு எதிராக கட்டுக்கதைகளை பரப்பிவிட்டு அனைத்து எல்லைகளையும் திரிணமுல் காங்கிரஸ் மீறிவிட்டது. சேவை செய்யும் இந்த அமைப்புகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். வாக்கு வங்கிக்காக எங்கள் நம்பிக்கையை அவர் அவமதிக்கிறார்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top