6 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன; பிரதமர் மோடி தகவல்!

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 6 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வாரிசு அரசியலை அடிப்படையாகக் கொண்ட எதிர்க்கட்சிகள் இளைஞர்களிடம் இருந்து மிகவும் அந்நியப்பட்டுள்ளன. அதனால் தான் உண்மை நிலவரத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக சாலை, ரயில் பாதைமின்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகின்றன.

2014-க்கு முன்பு சில நூறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது 1.25 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. இதில் 100 நிறுவனங்கள் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பை கொண்டு உலகளவில் யூனிகார்ன் நிறுவனங்களாக உருவெடுத்து உள்ளன. ஒவ்வொரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் எங்களது புத்திகூர்மையான 20-25 வயதுக்குட்பட்ட பல லட்சம் மகன், மகள்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 6 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதை காலமுறை தொழிலாளர் பங்கேற்பு கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.) தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

முன்பு நாம் செல் போன்களை இறக்குமதி செய்தோம். ஆனால் இப்போது செல் போன் உற்பத்தியில் உலகின் 2-வது பெரிய நாடாக மாறியுள்ளோம்.

உலகில் தயாரிக்கப்படும் 7 ஐபோன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.) திட்டத்தின் வெற்றிக்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.புதிய சிங்கப்பூர்களை உருவாக்குவோம்.

இந்தியாவில் தோராயமாக 1,300 தீவுகள் உள்ளன. இந்த தீவுகள் குறித்த பதிவோ, கணக்கெடுப்போ நம்மிடம் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்த நிலையில் விண்வெளி தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவற்றை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அதில் சில தீவுகள் சிங்கப்பூரின் அளவுக்கு உள்ளன. எனவே இந்தியாவைப் பொருத்தவரை வரும் காலத்தில் புதிய சிங்கப்பூர்களை உருவாக்குவது கடினமான செயலாக இருக்காது.

பிராண்ட் மோடி என்றால் என்ன? என்று கேட்கிறீர்கள். ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்பது எனக்கு தெரியாது. மோடியின் வாழ்க்கை மற்றும் பணியை மக்கள் பார்க்கிறார்கள். 100 வயதான எனது தாயார் ஹீராபென் தனது கடைசி நாட்களை அரசு மருத்துவ மனையில்தான் கழித்தார். இதில் இருந்து என் வாழ்க்கை சற்று வித்தியாசமானது என்பதை நாடும், நாட்டு மக்களும் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top