கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஷ் இன்று (மே 21) ஓய்வு பெற்ற நிலையில், பிரிவு உபசார விழாவில் தான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று அவர் பெருமையாக கூறியிருக்கிறார்.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சித்தரஞ்சன் தாஷ்; ஒடிசா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த இவர் கடந்த 2022ஆம் ஆண்டில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.
சுமார் 14 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்த சித்தரஞ்சன் தாஷ் நேற்று (மே 20) ஓய்வு பெற்றார். இதற்காகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது பேசிய சித்த ரஞ்சன் தாஷ், தான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்றும் இத்தனை காலம் நீதிபதியாக இருந்ததால் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து விலகி இருந்ததாகவும் தெரிவித்தார். அதேநேரம் ஏதேனும் உதவி அல்லது பணிக்காகத் தன்னை அழைத்தால் ஆர்எஸ்எஸ் செல்ல தயாராகவே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நான் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்துள்ளேன் என்பதை இங்குக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அந்த அமைப்புக்கு நான் நிறையக் கடன்பட்டிருக்கிறேன். நான் என் குழந்தைப் பருவத்தில் இருந்து என் இளமைக் காலம் வரை அந்த அமைப்பில் தான் இருந்துள்ளேன். நான் தைரியமாகவும், நேர்மையாகவும், மற்றவர்களைச் சமமாகப் பார்க்கவும் தேசபக்தி மற்றும் வேலையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கவும் அங்கு தான் கற்றுக்கொண்டேன்.
எனது பணியின் காரணமாக சுமார் 37 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து விலகி இருக்க வேண்டியதாகிவிட்டது. நான் எனது பணியில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஒரு போதும் ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பயன்படுத்தியது இல்லை.. ஏனென்றால் அது ஆர்எஸ்எஸ் கொள்கைகளுக்கு எதிரானது.
இதுவரை நான் அனைவரையும் சமமாகவே கருதி இருக்கிறேன். அவர் பணக்காரராக இருந்தாலும், கம்யூனிஸ்டாக இருந்தாலும், பாஜக, காங்கிரஸ் அல்லது திரிணாமுல் காங்கிரஸ் என எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவரையும் சமமாக நடத்தியுள்ளேன். எனக்கு முன் அனைவரும் சமம். நான் யாருக்காகவும் அல்லது எந்த அரசியல் தத்துவத்திற்காகவும் எந்த சார்பையும் கொண்டிருக்கவில்லை
நான் எல்லா சூழல்களிலும் நேர்மையாகவே நீதி வழங்க முயன்றுள்ளேன். நீதியை நிலைநாட்டச் சட்டம் வளையலாம். ஆனால் சட்டத்திற்கு ஏற்ப நீதியை வளைக்க முடியாது என்றார்.
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்துப் பேசிய அவர், ‘‘இப்போது எதாவது உதவி அல்லது பணிக்காக அழைத்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குச் செல்ல தயார். என் வாழ்க்கையில் நான் எந்தத் தவறும் செய்யாததால் நான் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்ல எனக்குத் தைரியம் இருக்கிறது. ஏனென்றால் இதைச் சொல்வதும் தவறு இல்லை’’ என்றார்.