கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை நீருடன், அங்குள்ள தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த கழிவுநீரும் சேர்ந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வந்தது.
அந்த அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த, 15ல் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்தது. நேற்று (மே 20) காலை அணையின் மேல் பகுதியில் பச்சை நிறத்தில் மாறிய நீரில் 2 கிலோ எடையுள்ள 7 டன்களுக்கு மேலான மீன்கள் இறந்து மிதந்தன.
அப்பகுதியில் மீன் பிடிப்பவர்கள் கூறியதாவது:
கடந்த வாரம் அணைக்கு வந்த ரசாயனம் கலந்த நீரால் மீன்கள் இறந்தன. நேற்று முன்தினம் இரவு டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதந்தன. அணை பகுதிக்கு செல்ல முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் மீதமுள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை மீன்வளத்துறை அதிகாரிகள் யாரும் வந்து பார்த்து, இறந்த மீன்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள 500 குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.