மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கீழ் தளத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவு மற்றும் கலைக்கூடத்தில் மழைநீர் உள்ளே புகுந்தது. இதனால் தரைத்தளத்தில் உள்ள இரண்டு நூலகப் பிரிவுகளும் மூடப்பட்டது.
மதுரை மாவட்டம், நத்தம் சாலையில் ரூ.215 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டடத்தை திராவிட மாடல் அரசு திறந்து வைத்தது. அங்கே மாணவர்களுக்கு தேவையான நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் திறந்து வைக்கப்பட்டதாக திமுகவினர் தம்பட்டம் அடித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மதுரையில் பெய்து வரும் கோடை மழையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தண்ணீர் புகுந்துள்ளது.
கீழ் தளத்தில் உள்ள கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு (பார்வையற்றோர் பிரிவு) ஆகியவற்றில் மழைநீர் புகுந்தது. கட்டிடத்திற்கு வெளிப்புறமாக செல்லக்கூடிய மழைநீர் குழாய் உடைந்து,மழை நீர் அறைகளில் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த பிரிவுகளை தற்காலிகமாக பொதுமக்கள், வாசகர்கள் பார்வையிடுவதற்கும், பயன்படுத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ளது.
215 கோடியில் மிகப்பிரமாண்டமான நூலகத்தை கட்டியதாக திராவிட மாடல் அரசு கூறிவந்தது. ஆனால் கோடை மழைக்கே தண்ணீர் உள்ளே புகும் அளவிற்குத்தான் கட்டுமானங்கள் நடைபெற்றுள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இன்னும் பருவ மழை பெய்யும்போது நூலகத்தின் நிலை என்னாகும் என மாணவர்கள் தற்போது கேள்வி எழுப்புகின்றனர்.