சென்னையில் 17 பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டறிந்து மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான கருக்கா வினோத் வழக்கை என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வந்தனர். அப்போது கருக்கா வினோத் தொடர்புடைய இடங்களில் ஆராய்ந்தபோது, அவரை முந்தைய வழக்கில் ஜாமினில் எடுத்தது நதியா என தெரியவந்தது.
இதையடுத்து கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த நதியா வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். நதியாவிடம் பறிமுதல் செய்த செல்போன்களை ஆராய்ந்தபோது 17 சிறுமிகளின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. அப்போதுதான் சிறுமிகளை நதியா பாலியல் தொழிலில் தள்ளிய அதிர்ச்சித் தகவல் என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் மாநில அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பின்னரே பெண் புரோக்கர் உள்ளிட்டோரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.