பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டங்களாக 430 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (மே 23) மாலையுடன் ஓய்கிறது.
ஜூன் 1 ஆம் தேதியுடன் 7 கட்ட தேர்தலும் நிறைவடைந்து, ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 6, 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் மர்ம நபர் ஒருவர்.
பிரதமர் மோடியை கொலை செய்து விடுவேன் என இந்தியில் பேசிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார் மர்ம நபர். இதையடுத்து, என்.ஐ.ஏ அதிகாரிகள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர்.
என்.ஐ.ஏ அளித்த புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் கிரைம் போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு பேசிய நபர், எங்கிருந்து பேசினார் என செல்போன் சிக்னலை வைத்து கண்டறியும் பணி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சார நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பாஜகவினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சமயத்தில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.