ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் 5 ஜிகாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என கோவையில் என்.ஐ.ஏ., சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாத்திரக் கடை நடத்தி வந்தார். மதமாற்றத்தை தடுத்தற்காக கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி ஜிகாதிகளால் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத் (40), வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன் (31), திருவிடை மருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத் (30), திருமங்கலக்குடியைச் சேர்ந்த நபீல் ஹாசன் (31) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தலைமறைவான 5 பேரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கண்ட 5 பேரின் புகைப்படங்கள் அடையாளங்களை அச்சடித்து நோட்டீஸ் மூலம் விநியோகித்தும் சுவரொட்டியாக பொது இடங்களில் ஒட்டியும் தேடி வருகின்றனர். இது தொடர்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டியில், ‘தேடப்பட்டு வரும், 5 குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும். 9499945100, 9962361122 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். ஏதேனும் ஒரு நபர் குறித்து விபரங்கள் தெரிவித்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.