சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக அதிகாரம் மிக்க நபர்களிடம் இருந்து அழுத்தம் வந்ததாக உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். வழக்கமான நடைமுறைப்படி, சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு,அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்தது ஏன் என்றும் நீதிபதி சுவாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசியதாகவும், வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டால், அந்த நபர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்து விடுவார்கள் என்பதால், அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்திரவில், சவுக்கு சங்கருக்கு எதிரான போதைப்பொருள் வழக்கை குறிப்பிடவில்லை எனவும், பொது அமைதி பாதிக்கப்படவில்லை, கைது செய்யப்பட்ட எந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்படாததால், உடனடியாக விடுதலை செய்யப்பட வாய்ப்பில்லை எனவும், இது போன்ற விஷயங்களை காவல்துறை கருத்தை செலுத்தாமல் குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
மற்றொரு நீதிபதி உத்தரவு: நீதிபதி பாலாஜி, வழக்கமான நடைமுறைப்படி இந்த வழக்கில் சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு, அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும். அரசு தரப்பில் இருந்து பதிலினை பெற்ற . பிறகே இந்த ஆட்கொணர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகளும் இரு வேறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளதால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்தனர். அதேசமயம், கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரை புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த உத்தரவை பிறப்பித்தனர்.