கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தூய்மை பணி மேற்கொள்ளாமல் இருப்பது பற்றி புகார் தெரிவித்த வாலிபருக்கும், காங்கிரஸ் பெண் கவுன்சிலருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கவுன்சிலரின் கணவர் தாக்கியதில் அந்த வாலிபரின் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளைம் நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 23வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கவிதா. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
இந்நிலையில் தான் கவிதாவின் வார்டில் தூய்மை பணிகள் மேற்கொள்ளாமல் தெரு முழுவதும் குப்பையால் நிரம்பியிருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் வாலிபர் ஒருவர் வார்டில் தூய்மை பணி மேற்கொள்ளாமல் இருப்பது பற்றி கவுன்சிலர் கவிதாவிடம் புகார் செய்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. ‛‛ஏரியாவை சுத்தமாக வைக்க வேண்டும். அதற்கு தூய்மை பணி செய்ய வேண்டும்’’ என வாலிபர் கூறுகிறார்.
அதற்கு காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா, அப்படியெல்லாம் செய்ய முடியாது என்கிறார். அப்போது அந்த வாலிபர், ‛‛வார்டை சுத்தமாக வைக்க முடியாவிட்டால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்’’ எனக்கூறுகிறார். அதற்கு கவிதாவும், அவரது கணவரும், ‛‛என்னை ராஜினாமா செய்யும்படி சொல்ல நீ யார். ராஜினாமா எல்லாம் செய்ய முடியாது’’ என்கின்றனர்.
அதற்கு அந்த இளைஞர், ‛‛வார்டை சுத்தம் செய்ய முடியாவிட்டால் ஏன் இங்கு வந்து கத்துறீங்க’’ என கேட்க, கவிதா ‛‛அவ்வளவு அக்கறை இருந்தால் நீயே வந்து சுத்தம் செய் டா பார்ப்போம்’’ என கோபமாக கூறுகிறார். மேலும் இந்த சமயத்தில் பெண் ஒருவர் வாலிபருக்கு ஆதரவாக வர, அவரிடம் கவிதாவின் ஆதரவாளர்கள், ‛‛நீ எங்களுக்கு ஓட்டுப்போட்டியா’’ என கேட்கின்றனர்.
அப்போது வாலிபர் குறுக்கிட, கவிதாவின் கணவர் அவரை ஓங்கி கன்னம் மற்றும் கழுத்தில் தாக்கினார். இதில் தரையில் பொத்தென விழுந்த வாலிபரின் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கவுன்சிலர் மற்றும் அவரது கணவரின் அடாவடித்தனத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது.