மஹாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பில், சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவிருக்கும் ஜவுளி பூங்காவுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார்.
இதைத் தொடர்ந்து, பிரதம மந்திரியின் விஸ்வகர்மா பயனாளிகளுக்கான திட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். அப்போது, மாநில அரசின் சார்பில் உருவாகியுள்ள இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 1932ல் இதே நாளில் தீண்டாமைக்கு எதிராக மகாத்மா காந்தி தனது போராட்டத்தை துவங்கினார். இந்த நாளில் விஸ்வகர்மா திட்டத்தை துவங்கி ஓராண்டு நிறைவு பெறுவது, வளர்ந்த இந்தியாவுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. விஸ்வகர்மா திட்டத்தின் பயனாளிகளுக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். இந்த ஓராண்டில் சகோதர, சகோதரிகளுக்கு ரூ.1,400 கோடி விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இன்று அமராவதியில் மாபெரும் ஜவுளிப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உலக ஜவுளிச் சந்தையில் இந்தியா முன்னணியாக திகழ்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஜவுளித்துறையின் இந்தியாவின் பழைய பெருமையை மீண்டும் நிலைநாட்டுவதே அரசின் நோக்கமாகும்.
எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., மக்களை வளர விடாமல், காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் தடுக்கின்றன. தலித் மக்களுக்கு எதிரான எண்ணம் கொண்ட காங்கிரஸ் கட்சியை அரசு நிர்வாகங்களில் இருந்து அகற்ற வேண்டும். விஸ்வகர்மா திட்டத்தின் மூலம், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., சமூக மக்கள் நன்கு பலனடைந்துள்ளனர்.
காங்கிரஸ் என்றாலே பொய் என்று தான் அர்த்தம். தெலுங்கானாவில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி கொடுத்து விட்டு, அதனை இன்னும் நிறைவேற்றாததால், விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துடன் கவலையில் உள்ளனர். இன்றைய காங்கிரஸிடம் தேசபக்தி முற்றிலும் மலிந்து விட்டது.
காங்கிரஸ் கட்சியினர் வெளிநாட்டு மண்ணில் தேசத்திற்கு எதிராக முழங்குவது, இந்தியாவின் கலாச்சாரத்தை அவமதிப்பது, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை பார்க்க முடிகிறது. நேர்மறையற்ற, ஊழல்மிக்க கட்சி என்றால், அது காங்கிரஸ் தான். இவ்வாறு அவர் பேசினார்.