45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி வென்றதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் உறுதியானது. பிரக்ஞானந்தாவும் இறுதி சுற்று ஆட்டத்தில் வாகை சூடினார்.
இது செஸ் ஒலிம்பியாடில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக அமைந்துள்ளது. இந்திய ஆடவர் அணியில் விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா ஆகியோரும் உள்ளனர். 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வெல்வதற்கான ரேஸில் இந்திய அணிக்கு சீனா போட்டியாளராக இருந்தது. இருப்பினும் இறுதியில் அந்த அணி பின்தங்கியது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் இந்தியாவின் இரண்டாவது அணி வெண்கலம் வென்றிருந்தது. 2014-ல் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.
அதே போன்று மகளிர் பிரிவிலும் தங்கம் வென்ற இந்தியா:
செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவிலும் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. அஜர்பைஜானுக்கு எதிரான இறுதி சுற்றில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் மற்றும் ஹரிகா ஆகியோர் வெற்றி பெற்றனர். வைஷாலி ஆட்டத்தை டிரா செய்தார். மகளிர் பிரிவில் கஜகஸ்தான் வெள்ளியும், அமெரிக்கா வெண்கலமும் வென்றது.
11 சுற்றுகளில் 9 சுற்றுகளை இந்திய மகளிர் அணி வென்றது குறிப்பிடத்தக்கது. போலந்து அணிக்கு எதிராக தோல்வியும், அமெரிக்காவுடன் டிராவும் செய்திருந்தது இந்தியா. ஒரே நேரத்தில் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள நமது வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.