பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார்.
இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த ஜூலை மாதம், கலாசார சொத்து பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இரு நாடுகளில் எந்த நாட்டில் இருந்து பழங்கால கலைப்பொருட்கள் மற்றொரு நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டாலும், அந்த நாட்டிடமே அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தப்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 297 பழங்கால பொருட்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே இந்நிகழ்வு நடந்துள்ளது.
இதற்காக அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
கலாசார தொடர்பை வலுப்படுத்தவும், சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும் உதவும் நடவடிக்கையாக, 297 பழங்கால பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பதை அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது.
இதற்காக ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவை இந்தியாவின் சரித்திர கலாசார பொருட்கள் மட்டுமின்றி, அதன் நாகரிகத்தின் ஒரு அங்கம் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இத்துடன், கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட இந்திய பழங்கால பொருட்களின் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், அமெரிக்காவிடம் இருந்து மட்டும் 578 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், 2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை ஒரே ஒரு பழங்கால பொருள் மட்டுமே மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.