நாட்டில் உள்ள பல முன்னணி தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர, பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் இந்தாண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக பயிற்சியில் சேருபவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவி தொகையும், ஒரு முறை மானியமாக 6,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
டி.சி.எஸ்., மஹிந்திரா, ரிலையன்ஸ், மாருதி சுசூகி, எச்.டி.எப்.சி., வங்கி உட்பட 500க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இந்த பயிற்சி திட்டத்தில் சேர விரும்புவோர், www.pminternship.mca.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதில், பெருநிறுவனங்களில் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 3ல் துவங்கி 20ல் முடிந்தது. இதில் 280 நிறுவனங்கள் 1.28 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை அளித்துள்ளனர்.
இதை தொடர்ந்து 10வது, பிளஸ்2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கான விண்ணப்ப பதிவு அக்டோபர் 12ல் துவங்கியது. வரும் 10ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதில் பயிற்சி வாய்ப்பு பெறும் 1.25 லட்சம் இளைஞர்களின் இறுதி பட்டியல் டிசம்பர் 2ல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.