ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டுவிட்டது. உலகின் எந்த சக்தியாலும் அதனை மீட்டெடுக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி, அந்த யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் சில தினங்களுக்கு முன்னர் இண்டி கூட்டணியினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்பதை பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, துலே பகுதியில் (நவம்பர் 08) நடைபெற்ற பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவரக் கோரி, ஜம்மு-காஷ்மீர் பேரவையில் எவ்வாறு தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்பதையும், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு வெளியேற்றப்பட்டனர் என்பதையும் தொலைக்காட்சி வாயிலாக மக்கள் பார்த்திருப்பார்கள்.
காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பாகிஸ்தானின் செயல்திட்டத்தை ஊக்குவிப்பதோடு, பிரிவினைவாதிகளின் குரலாக ஒலிப்பது மக்களுக்கு புரிந்திருக்கும்.
ஜம்மு-காஷ்மீரில் இருந்து அரசமைப்புச் சட்டத்தை அகற்ற அக்கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், உலகின் எந்த சக்தியாலும் 370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது. பி.ஆர்.அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டம் மட்டுமே ஜம்மு-காஷ்மீரில் பின்பற்றப்படும். மக்களின் ஆசி எனக்கு இருக்கும் வரை, அக்கட்சிகளின் செயல்திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது.
ஜாதி, இனம் ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. ஒரு ஜாதிக்கு எதிராக மற்றொரு ஜாதியை எதிர்த்து நிற்கச் செய்து, ஒற்றுமையை பலவீனமாக்க அக்கட்சி முயல்கிறது. எனவே, நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் என அனைவரும் ஒன்றுபட்டால், காங்கிரஸின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.