விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களை பாதுகாக்கின்ற பொறுப்பையும், விஐபிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பையும் புதிதாக உருவாக்கப்படும் பெண்கள் தொழிலக பாதுகாப்பு படை ஏற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடகமான எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘‘தேசத்தை கட்டியெழுப்புவதில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை மெய்ப்பிக்கும் வகையிலான உறுதியான நகர்வில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) முதல்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய பட்டாலியனுக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உயரடுக்கு படையாக உயர்த்தப்படும் விதமாக விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கும் பொறுப்பையும், கமாண்டோக்களாக விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பையும் இனி மகளிர் பட்டாலியன் ஏற்கும். இந்த முடிவு, நாட்டைப் பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பில் அதிக எண்ணிக்கையிலான பெண்களின் விருப்பங்களை நிறைவேற்றும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாரத நாட்டில் புதிதாக உருவாக்கப்படும் பெண்கள் படையின் வலிமை உலகளவில் போற்றப்படும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.