இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாள் டிசம்பர் 25

நவபாரதச் சிற்பி சுவாமி விவேகானந்தர் குமரிமுனையில் ஸ்ரீ பாதம் பாறையில் தவம் செய்து தியானம் கைகூடியதும், பாரதமாதா சர்வ அலங்காரங்களுடன் சக்கரவர்தினியாய் வைரக்கிரீடம் தரித்து தங்கச் சிம்மாசனத்தில் சூரியப் பிரகாசப் பொலிவுடன் வீற்றிருக்க பலநாட்டு மன்னர்களும் அவரின் ஆணைக்காகக் காத்து நிற்கும் காட்சியைக் கண்டார். இந்த தியானக்காட்சியை அவர் கண்ட நாள் 1892 டிசம்பர் 25.

சுவாமி விவேகானந்தரின் பாரத்தக்கனவை நனவாக்கும் விதத்தில் ” ஒரேபாரதம் உன்னதபாரதம்” என்ற அடையாளக்குறியுடன் பணியாற்றிவரும் நம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி ,”வாஜ்பாயின் அடிச் சுவட்டில் அமைந்த ஆட்சி ” எனக்கூறும் விதத்தில் ஆன்மிகம் கலந்த அரசியலுக்கு இலக்கணம் தந்த அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் 1924 டிசம்பர் 25. எளிய வாழ்வும் உயரிய சிந்தனையும் தேசபக்தியும் தெய்வபக்தியும் அன்பும் அகிம்சையும் வாய்மையும் , நடுவுநிலைமையும் அஞ்சாநெஞ்சமும் நேர்மையும் சுயநலமின்மையும் தியாக உணர்வும் தலைமை தங்குவோர்க்கு இருக்க வேண்டிய தலையாய பண்புகளாகும் . இவை அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற உன்னதத் தலைவர் வாஜ்பாய் .

தான் சார்ந்திருந்த கட்சியினரும் எதிர்கட்சியினரும் பாராட்டுகின்ற தலைவராக விளங்கியவர் வாஜ்பாய் அன்னாரின் வாழ்வியலைச் சாறுபிழிந்து தருவதே இக்கட்டுரையின் நோக்கம். பாரதம் இனி என்றென்றும் தாமரைநாயகர்களாலே ஆளப்படும் என்ற உறுதிப்பாட்டுடன் கட்டுரையைத் தொடங்குகிறேன்.

யகப்பயனாய்த் தோன்றிய விதை தாமரை :

இந்த உலகம் நிலை பெற்றிருப்பதற்கான காரணம் கூறும் சங்கப்பாடல்,
” தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே”- என்கிறது.

இப்பாடல் பாரதப்பண்பாட்டின் உயிர் மூச்சாய்த் திகழ்வதாகும்
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் எவ்விதத் துயருமின்றி எல்லோரும் வாழவேண்டும் என்பது பாரதிய வாழ்வின் இலட்சியமாகும். இந்த இலட்சிய வாழ்வு வாழும் வாழ்வின் அடையாளமே யக்ஞங்கள். இம்மையிலோ மறுமையிலோ பிரதிபலன் எதையும் எதிர்பாராமல் உலக நன்மைக்காகச் செய்யப்படும் தொண்டிற்கு யக்ஞம் என்று பெயர்.

“கைமாறு வேண்டா கடப்பாடு மரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு ” -என்னும் குறள்கட்டும் கருமேகம் போன்ற வாழ்வு வாழும் வால்வு யக்ஞமாகும்.
“உணவினின்று உயிர்கள் உண்டாகின்றன. மழையினின்று உணவு உருவாகின்றது
யக்ஞ்சத்திலிருந்து மழை உண்டாகின்றது
யக்ஞ்த்திற்குப் பிறப்பிடம் தர்மம்“ எனக் கூறும் கீதை “யக்ஞத்துக்கான தர்மத்தைப் பற்றற்று நன்கு இயற்று” என்று கட்டளையிடுகின்றது.

தன்னலம் கருதாத புண்ணியச் செயலாகவும் தியாத்தோடு செய்யப்படும் சேவையாகவும், உலக நன்மைக்கென்றே செய்யப்படும் செயலாகவும், ஈசுவர ஆராதனைக்காக ஆற்றப்படும் வினையாகவும் திகழும் இந்த யக்ஞம் பல பெயர்களில் உலக நன்மைக்காகச் செய்யப்படுகின்றது . அவ்வாறு செய்யப்படும் யக்ஞங்களுள்ஒன்றின் பெயர் “வாஜ்பாய் ” என்பதாகும்.
“ஊருக்கு உழைந்திடல் யோகம்” என்னும் வாழ்வியலை யக்ஞப்பயனாகத் தருவது இந்த யக்ஞதின் சிறப்பம்சமாகும். ஒருவர் இந்த “வாஜ்பாய் ” யக் ஞ்சதை தன் வாழ்நாளில் செய்தால் ஏழு தலைமுறையினர் தங்கள் பெயரோடு ” வாஜ்பாய் ” என்னும் சிறப்புப்பெயரை சேர்த்துக் கொள்ளும் உரிமை பெறுவர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்ராவிலிருந்து 20 கி.மீ தொலைவில் யமுனை ஆற்றங்கரையில் பாடேஸ்வரா என்னும் திருத்தல் உள்ளது. அந்த ஊருக்குப் பெருமை சேர்ப்பது அங்கிருக்கும் மகாதேவர் கோவிலாகும். இந்த மகாதேவர் ஆலயத்தின் அருகில், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகிய ஒரு அந்தண அறவோர் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த “வாஜ்பாய் ” யஞ்சத்தை செய்திருந்தார். அவரின் ஏழாவது தலைமுறையினராக “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்னும் யாகபயனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காகப் பிறந்தவரே அடல்பிகாரி வாஜிபாய்.

அடல்பிகாரி வாஜ்பாயின் தந்தை கிருஷ்ணபிகாரி வாஜ்பாய் மத்திய பிரதேசத்திலுள்ள குவாலியரில் ஆசிரியராகப் பணியாற்றி வந்ததால் தன் மனைவி கிருஷ்ண தேவியுடன் குவாலியரில் வசித்துவந்தார். இந்தத் தம்பதியருக்கு குவாலியரில் வைத்துதான் 1924 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 -ஆம் நாள் அடல்பிகாரி வாஜ்பாயின் பிறந்தார்.

நரேந்திர வைரம் பட்டைத்தீட்டப்படுவதற்கு இராமகிருஷ்ண பட்டறை தயாரக இருந்தது போல் இந்த விதைத்தாமரை (வாஜ்பாய்) வேர்விட்டு வளர்ந்து உலகெங்கும் தன் நறுமணத்தைப் பரப்புவதற்கு இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பண்பாடு தாடகம் ஒன்று 1925 -ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளின் தோற்றுவிக்கப்பட்டது.

“நமது பண்பாட்டின் வேர்களைக் கவனமாகத் தோண்டிக் கண்டுபிடித்து , அந்த உயிரூட்டமுள்ள வேர்முனையின் மீது இன்றைய வாழ்க்கையைப் பதியம் போட்டு வளர்த்தால் மட்டுமே பாரதத்தை மேம்படுத்த முடியும்”என்பதையும் தெரிந்திருந்தாலும் பாரதப் பண்பாடு பற்றி சரியான தத்துவ ஞானமும் வரலாற்று ஞானமும் தனக்கு இருந்தாலும் டாக்டர் ஹெக்டேவார் 1925 – ஆம் ஆண்டு விஜயதசமியில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் என்னும் அந்த தடாகத்தை நாகபுரியில் உருவாக்கினார்.

1940 ஜூன் 21 -ம் தேதி ஹெக்டேவார் இறைவனடி சேர்ந்தார். அதே ஆண்டு ஜூலை 23 -ம் தேதி, குருஜி என்ற சிறப்பு பெயர் கொண்ட மாதவ சதாசிவ கோல்வல்க்கர் சங்கத்தின் அகிலபாரத் தலைவரானார்.
1.இவர் எம்.எஸ். ஸி. பட்டம் பெற்று காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் இரண்டு ஆண்டுக்குள் நாகபுரியில் வழக்கறிஞராகவும் தொழில் நடத்தியவர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சரின் வாழ்க்கையினாலும், சுவாமி விவேகானந்தரின் நூல்களாலும் ஆட்கொள்ளப்பட்டு சரக்காச்சி ஆசிரமத்தில் சுவாமி அகண்டாநந்தரின் மந்திர உபதேசம் பெற்றவர்.
அகண்டாநந்தர் கமண்டலம் முதலான தன் உடன்மகளைத் தன் நினைவாக இருக்கும் படி இவருக்குக் கொடுத்திருந்தார் . “தாயும், தாய்நாடும், சொர்கத்தைவிட மேலானவை. நான் என் தாய்நாட்டிற்குச் சேவை செய்வதன் மூலம் குருதேவருக்குச் சேவை செய்வேன்” என அகண்டானந்தர் கூறிய “தாய் நாடுப்பணியே இறைபணி” என்னும் தாரக மந்திரமே இவரின் (குருஜியின்) சமயப்பணியாகும். “தேசமே தெய்வம் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதே தெய்வப்பணி” என்பது தான் குருஜியின் சமய சிந்தனை.

அதே ஆண்டு (1940) குவாலியரிலுள்ள லட்சுமி கஞ்ச் சங்கக்கிளையின் ஷாகாவில் வாஜ்பாய் சங்க உறுப்பினராக சேர்ந்தார்.

1941 -ல் சங்க அலுவலர்களுக்கான முதல் பயிற்சி முகாமும்
1942 -ல் இரண்டாமாண்டு பயிற்சி முகாமும்
1944 -ல் நாகபுரில் மூன்றாமாண்டு பயிற்சியும் முடித்து
1946 -ல் ‘கண்டீலா’ நகரத்தின் முழுநேர பிரச்சாரக் – ஆக வாஜ்பாய் சங்கத்தின் முழுநேர ஊழியரானார். அதே ஆண்டு (1946) பண்டிட் தீனதயாள் உபத்யாவின் ஆலோசனையையும் ஆதரவையும் பெற்று “ராஷ்ட்ர தர்மம் ” என்னும் மாத இதழின் பதிப்பாசிரியரானார்”. “பாஞ்ச ஜன்யா ” என்ற வார இதழுக்கும், “ஸ்வதேஷ் தைனிக்” என்ற நாளிதழுக்கும் மேலும் “கர்மயோகி ” என்னும் மாத இதழுக்கும் “வீர அர்ஜுனன் ” என்னும் வார இதழுக்கும் வாஜ்பாய் ஆசிரியராக இருந்துள்ளார்.

1946 -ல் முகமது அலி ஜின்ன.”நாங்கள் இந்தியாவைப் பிரிப்போம் அல்லது இந்தியாவை அழிப்போம்” என பிரிவினை வாதம் பேசினார். தேசப்பிரிவினை என்னும் கொள்கை அடிப்படையில் நேரடி நடவடிக்கை அறிவித்தார். இதனால் இந்துக்களைப் படுகொலை செய்யும் கோரத் தாண்டவம் நடைபெற்றது.

1947 ஜூன் 3 -ல் தேசப்பிரிவினை அகில இந்திய காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. 1947 ஆகஸ்ட் 15 ம் தேதி நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது.

தேசப்ப்பிரிவின் காரணமான அரசியல் அதிகாரம் கையில் கிடைத்ததும் முஸ்லீம்கள் பாக்கிஸ்தான் பகுதிக்குள் இருந்த இந்துக்களை கொடுமைப்படுத்தினார். இந்து பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது . நிலங்களையும் தாங்கள் ஈட்டிய செல்வங்களையும் பாகிஸ்தானிலே போட்டுவிட்டு இந்துக்கள் உயிருக்கு பயந்து இந்தியாவிற்குள் குடிபுகுந்தனர். அதே நேரத்தில் இந்தியாவில் நேருவும் அவரது அமைச்சர்களும் முஸ்லீம்களை வாக்கு வங்கியாகக்கருதி அவைகளை பாதுகாப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினர். மொத்தத்தில் பாகிஸ்தானில் முஸ்லீம்கள் பாதுகாப்புடனும் பலத்துடனும் இருப்பதைவிட மேலான பாதுகாப்புடனும் அரசு பலத்துடனும் இந்தியாவில் இருந்த முஸ்லீம்கள் இருந்தனர். ஒரு சில இடங்களில் மதக்கலவரங்கள் வெடித்தன. அதற்கு பாக்கிஸ்தான் அரசு காஷ்மீரத்திலுள்ள பழங்குடிமக்களை பயன்படுத்தி காஷ்மீரின் ஒரு கணிசமான நிலப்பரப்பைப் பிடித்துக் கொண்டது. வாஜ்பாய் ஒரு ஸ்வயம் சேவக் ஆக பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு அரவணைப்பும் ஆதரவும் அளித்து வந்தார்.

1948 ஜனவரி 30 -ம் தேதி மஹாத்மா காந்தி கொலை செய்யப்பட்டார். பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்தி அரசாங்கம் சங்கத்தை 1948 பிப்ரவரி 4 -ம் தேதி தடைசெய்தது. வாஜ்பாய் நடத்திவந்த பத்திரிகை அலுவலகங்களும் பாரத அச்சகமும் முத்திரை வைத்து மூடப்பட்டது. இரவோடு இரவாக வாஜ்பாய் அலகதாபாத் சென்றுவிட்டார். காந்தி கொலைக்கும் சங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததின் பெயரில் 14.7.1949 அன்று சங்கத்தின்மீதிருந்த தடை நீக்கப்பட்டது. வாஜ்பாய் நடத்திவந்த பத்திரிகை அலுவலகத்தின்பூட்டு திறக்கப்பட்டது. வாஜ்பாயின் எழுத்துப்பணி தொடர்ந்தது. பத்திரிகை மூலம் உலகின் கவனத்தை வாஜ்பாய் கவர்ந்தார். புகழ் பெற்ற கவிஞர்களும் சிறந்த இலக்கிய வாதிகளும் தேசபக்த வாசகர்களும் வாஜ்பாயை மதிக்க தொடங்கினார். அறிவு ஜீவிகளும் அரசியல் தலைவர்களும் வீர அர்ஜுனன் இதழில் வெளிவந்த செய்திகளையும் கட்டுரைகளையும் துணுக்குகளையும் விவாதிக்க தொடங்கினார். ” வாஜ்பாயின் எழுத்து தனித்து நிற்கும் எழுத்து அறிவை தூண்டும் எழுத்து, சிந்தனையின் வீச்சில் எழுந்த எழுத்து”- என்று கற்றறிந்தோர் பாராட்டினார்.

இக்காலத்தில் சிறந்த பேச்சாளர் தரமான கவிஞர் ஆற்றல்மிக்க அறிவாளி சிறந்த சிந்தனையாளர் ஆழமான தேசியவாதி, திறமையான பத்திரிகையாளர் என பல வகைகளிலும் பாராட்டி புகழப்படும் நிலையை வாஜ்பாய் அடைந்தார்.

தீபத்தாமரையாய் வாஜ்பாய் :

சுதந்திர இந்தியாவில் அமையப்போகும் சொந்த மக்களின் அரசு சொந்தமக்களுக்காக சொந்த மக்களாலான அரசாக அமையும் என எதிர்பார்த்த தேச பக்தர்களின் கனவை நேருவின் அரசு தகர்த்து எறியப்பட்டிருந்தது. தேசிய தர்மம் காக்கப்படவும் இல்லை. தேசியம் தெய்வத்தன்மை வாய்ந்தது என வழங்கப்படவும் இல்லை. எனவே தேசிய தர்மம் காக்கின்ற அரசு அமைக்கும் இலட்சியம் கொண்ட ஒரு அரசியல் அமைப்பு (அரசியல் கட்சி) தேவையென சங்கத்தின் தேசிய தலைவர் சிந்தித்து கொண்டிருந்தார். கிழக்கு வங்காளத்தில் இந்துக்களின் நலனுக்குப் பாதகமான விதத்தில் நேருவும் பாகிஸ்தான் பிரதமர் பெரேரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று அறிவித்து 1950 ம் ஆண்டு சியாம பிரசாத் முகர்ஜி நேருவின் அமைச்சரவையில் இருந்து வெளியேறினார்.
குருஜியின் சிந்தனையும் முகர்ஜியின் ராஜினாமாவும் ஆசிய சமாஜ நிர்வாகிகளின் பாரதியச் சிந்தனையும் அவர்களை ஒன்று கூட வைத்தது. 21 – 10 – 1951 விஜய தசமி நாளன்று ஜன சங்கம் என்ற பெயரில் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. முகர்ஜி அமைப்பின் நிறுவனத் தலைவரானார்.

சங்கம் தன் முழுநேர ஊழியர்களில் தீனதயாள் உபாத்யாய, வாஜ்பாய் போன்றவர்களை அரசியல் அமைப்பான ஜன சங்கத்திற்குக் கொடுத்து. முகர்ஜியின் தனி செயலராக வாஜ்பாய் நியமிக்கப்பட்டார். முகர்ஜி 1952 – ஆம் ஆண்டு தீனதயாள் உபாத்யாவை ஜன சங்கத்தின் பொதுச்செயலராக நியமித்தார்.

பாரதிய ஜன சங்கத்தை மாபெரும் இயக்கமாக வளரச் செய்ய தீன தயாள் கடின உழைப்பும், வாஜ்பாயின் எழுத்தாற்றலும் பேச்சுத்திறமையும், முகர்ஜியின் தலைமைப்பண்பும் பெரிதும் உதவின்.
தனது 32 ஆவது வயதில் மனைவி இறந்த பின் மறுமணம் செய்து கொள்ளாத முகர்ஜியின் வாழ்வும், திருமணமே செய்து கொள்ளாத தீன தயாள் உபாத்யாய மற்றும் வாஜ்பாயின் வாழ்வும் தேசத்திற்காகவே வாழும் வாழ்வாக அமைந்து மூவர் வாழ்வும் ஜன சங்கத்தின் வாழ்வும் வேறல்ல என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. எனவே பாரதிய ஜன சங்கம் என்னும் கட்சியின் வரலாறு என்பதே இம்மூவரின் வரலாறாக மாறியது.

1952 – ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடை பெற்றது. முகர்ஜி உட்பட 3 எம்பிக்கள் வெற்றி பெற்றனர். 32 உறுப்பினைர்களை கொண்ட தேசிய ஜனநாயகக் கட்சி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு முகர்ஜி நாடாளுமன்றத்தின் எதிர் கட்சித் தலைவரானார். முகர்ஜி 370 சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை நீக்கக் கோரி போராட்டம் நடத்தி கைதியாகி 1953 ஜூன் 13 அன்று சிறையிலே மரணமடைந்தார். பாரதிய ஜன சங்கம் கட்சியைக் கூடுதலாக காக்க வேண்டிய பொறுப்பு வாஜ்பாய்க்கு ஏற்பட்டது.

1957 – ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாய் வெற்றி பெற்று தன் கன்னி உரையேத் தன் தாய் மொழியான இந்தியில் பேசினார். அந்த உரை நாடாளுமனறத்தில் பேசப்பட்ட முதல் இந்திய மொழியின் உரை என்ற வரலாற்றைப் பதித்தது.

1962 பொது தேர்தலில் வாஜ்பாய் தோல்வி அடைந்தார் 14 பேர் வெற்றி பெற்றனர். வாஜ்பாய் மேல் சபை உறுப்பினராக பாராளுமன்றம் சென்றார். 1964 -ல் நேரு மறைத்த பின்னர் லால் பகதூர் சாஸ்த்திரி பாரதப் பிரதமரானார்.

1966 -ல் சாஸ்திரி மரணமடைந்தபின் இந்திராகாந்தி பாரதப் பிரதமரானார்.

1967 -ல் பொது தேர்தலில் வாஜ்பாய் உட்பட 35 பேர் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றனர்.

1968 பெப்ரவரி 11 -ம் நாள் பீகார் மாநில ஜன சங்க செயற்குழு கூட்டத்திற்கு ரயிலில் போய்க் கொண்டிருந்த தீனதையாள் உபாத்யாய பாதகர்களால் படுகொலை செய்யப்பட்டார். பாரதிய பண்பாட்டிற்கும், தேசியத்திற்கும், தெய்வீகத்திற்கும் பேரிழப்பு ஏற்பட்டது. மனிதன் எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்துகாட்டிய மாமனிதன் கொல்லப்பட்டுவிட்டான். தீனதையாள்ஜியின் பூஉடல் டெல்லி கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. குருஜி கண்ணீர்விட்டு கதறினார். தன் தலைவனை தன், தன் வழிகாட்டியை , தன்னை முன்னிலை படுத்தி பின்னிருந்து அதை அழகு பார்த்த தீயாக சீலனை -தீனதயாள்ஜியை இழந்துவிட்ட வாஜ்பாய் தீனமான குரலில் ஆனால் தீர்க்கமான முடிவில் “தீனதையாள்ஜி சிந்திய இரத்தத்தை எடுத்து நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்வோம். பண்டிட்ஜி விட்டுவிட்டுப் போன புனிதமான தேசப்பணியை தொடர்வோம். அவருடைய லட்சியம் வெற்றிபெறும் வரை ஓயாது உழைக்க சபதமெடுப்போம் என்று சபதம் எடுத்து கொண்டார். 1968 -ல் வாஜ்பாய் ஜனசங்கத்தின் தலைவரானார். தொடர்ந்து மூன்றுமுறை தலைவராக இருந்தார்.

1973 ஜூன் 5 -ம் நாள் குருஜி தன்னுடலை நீத்தார். 1975 ஜூன் 26 -ம் தேதி இந்தியா முழுவதும் நெருக்கடிநிலை பிரகடனப் படுத்தப்பட்டது. வாஜ்பாய், அத்வானி போன்ற தேசியத்தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். ஜூலை 4 -ம் தேதி சங்கம் தடை செய்யப்பட்டது.

1977 -ல் நெருக்கடி நிலைஅறிவிப்பு விலக்கி கொள்ளப்பட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜெயப்பிரகாச நாராயணின் அரசியல் தலைமையில் ஜனதா தளம் உருவாக்கப்பட்டது. வாஜ்பாய் ஜங்சங்கத்தை ஜனதாக் கட்சியில் இணைத்தார். ஜனதாக்கட்சி 295 இடங்களில் வெற்றிபெற்றது. அதில் 93 பேர் ஜன சங்கத்தினர் மொராஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. வாஜ்பாய் வெளிஉறவுத்துறை அமைச்சரானார். 30 மாதங்களில் சரண்சிங் காரணமாக ஜனதா அரசு கவிழ்ந்தது. 1979 ஜூலை 23 அன்று மொரார்ஜி தேசாய் இராஜனாமா செய்தார். 28.7.1979 அன்று சரண்சிங் பாரதப்பிரதமரானார். குறுகிய காலத்தில் ஆட்சியை இழந்தார். 1980 பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திராகாந்தி மீண்டும் பாரத பிரதமரானார். ஜனதாக்கட்சிக்குள் ஜனசங்கத்திலிருந்து வந்தவர்கள் ஆர் .எஸ்.எஸ் உடனான தங்கள் தொடர்பை விட்டுவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. வாஜ்பாய் அவர்கள்”எங்கள் தாய் இயக்கம் ஆர் .எஸ்.எஸ் தான் அதனுடனான எங்கள் தொடர்பைவிட முடியாது வேண்டுமானால் ஜனதாவிலிருந்து விடுபட்டுக் கொள்கிறோம்” எனக் கூறி புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்.

1980 ஏப்ரல் 6ம் நாள் வாஜ்பாயின் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். அன்று பம்பாயில் பாரதிய ஜனதா கட்சி உருவானது. அதன் தேசிய தலைவராக வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாமரை பா. ஜ. கா வின் தேர்தல் சின்னமானது. தீபத்தாமரையாய் வளர்ந்த வாஜ்பாய் தாமரை தந்த தாமரையாய் தலைமையேற்றார்.

அலர் தாமரையாய் வாஜ்பாய் :

1980 -ல் மீண்டும் பிரதமரான இந்திராகாந்தி எதிர்கட்சித் தலைவர்களின் ஒற்றுமையின்மையை நன்கு புரிந்துகொண்டு அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தினார். பிந்தரன்வாலே போன்ற பிரிவினை வாதிகளை ஊக்கப்படுத்தினார். இதற்கு முன்னால் இருந்ததை விட அதிகார துஷ்பிரயோகம் கூடுதலாக இருந்தது. லஞ்ச லாவண்யங்கள் அதிகமாக இருந்தன. பாரதிய ஜனதா கட்சியும் இயல்பான தன் கொள்கைகளைக் கொண்டு அரசியல் நடத்தியது. அமைதியாகச் சென்ற அரசியல் 1984 அக்டோபர் 31 -ல் திடீர் திருப்பத்தைச் சந்தித்தது . பாரதப் பிரதமர் இந்திராகாந்தி தன் மெய்க்காப்பாளராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். காங்கிரஸ் தலைவர்கள் முன்நின்று சீக்கியர்களை வேட்டையாடினர். வாஜ்பாய் இதை வன்மையாகக் கண்டித்தார். இந்திராகாந்தியின் மூத்தமகன் ராஜிவ் காந்தி பிரதாப் பிரதமரானார். 1984 -ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்திராகாந்தியின் மரணம் காங்கிரஸ் கட்சிக்கு அனுதாப அலையாய்த் தோற்றுவித்திருந்தது. பாரதிய ஜனதா கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வாஜ்பாய் தோல்வி அடைந்தார்.
இந்தத் தோல்வி பாரதிய ஜனதா கட்சி ஒரு புது வாழ்வு கொடுத்தது எனலாம். வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜனா கிருஷ்ணமூர்த்தி, பிரமோத் மஹாஜன், போன்ற தலைவர்கள் கண்ணுறக்கமின்றிக் கட்சிப் பணியாற்றினார்கள். இந்தியாவின் பட்டி தொட்டியெங்கும் பாஜக கிளைகள்ன் நிறுவப்பட்டன.

வாஜ்பாய் 1986ல் மேல்சபை உறுப்பினராக பாராளுமன்றம் சென்றார். ஷாபானு ஜீவனாம்ச வழக்கு – உச்சநீதிமன்ற தீர்ப்பு- மதத்தீவிரவாத்திற்கு அடிபணிந்து ராஜிவ் காந்தி கொண்டுவந்த சட்டத்திருத்தம் ஆகியவை – பாரதிய ஜனதா கட்சித்தலைவர்களும் தொண்டர்களாலும் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பொது சிவில் சட்டம், சிறுபான்மையினர் சலுகைகள் சமயச்சார்பின்மை, போலிமதச்சார்பின்மை போன்ற கருத்துகளை பாமர மக்களும் புரியும் படி செய்தனர் இந்தியா மக்கள் தங்களை இந்தியாவைக் காக்கும் பொறுப்பிற்கு தயார்படுத்திக்கொண்டார்கள். இந்துக்கள் ஒன்றுபட ஆரம்பித்தனர்.

1987 -ல் விஸ்வ ஹிந்து பரிஷத் ராமபிரானுக்கு அவர் பிறந்த அயோத்தியில் இருந்த ஆலயத்தை மீண்டும் புனரமைத்து வழிபட்டு தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வெகுஜன இயக்கமாக மாறியது.
போபார்ஸ் பீரங்கிப் பேர ஊழல் காரணமாக வி.பி. சிங். காங்கிரசிலிருந்து விலகி ஜனதா தளத்தில் சேர்ந்தார். 1989 பொதுத் தேர்தலில் ஜனதா தளம் ஆட்சி அமைத்தது 86 இடங்களைப் பெற்றிருந்த பா.ஜ.க வி.பி சிங்ற்கு ஆதரவு அளித்திருந்தது.

பா.ஜ.க 1990 -ல் அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையைத் தன் தேசிய செயல்திட்டத்தில் சேர்த்துக்கொண்டது. விஸ்வஹிந்து பரிஷத்தின் அழைப்பை ஏற்று கரசேவைச் செய்யச் சென்ற ஸ்ரீ ராமபக்தர்களை உத்தரப்பிரதேசத்தை ஆண்ட முலாயம் சிங் யாதவின் அரசு கொன்று குவித்தது. சராயு நதிக்கரையில் குவிந்துகிடந்த பிணக்குவியலுக்கு அளவே இல்லை. இந்த நிகழ்வு ஒட்டுமொத்த இந்து வாக்கு வங்கிக்கு வித்திட்டது. ரதயாத்திரை சென்ற அத்வானி கைதுசெய்யப்பட்டார். அதை தொடர்ந்து வி.பி . சிங் அரசிற்கு பாஜக அளித்த ஆதரவை விலக்கி கொண்டது. ஆட்சியை கவிழவைத்தது. 1990 நவம்பர் 7 ம் தேதி வி.பி. சிங் பதிவிலிருந்து விலகினார். நவம்பர் 10 ம் சந்திரசேகரர் காங்கிரஸ் ஆதரவில் பிரதமரானார்.1991 ஜூன் 21ம் தேதி சந்திரசேகரர் தனது பதவியை காங்கிரஸ் கொடுத்த ஆதரவைத் திரும்ப பெற்றதால் ராஜினாமா செய்தார்.

1991பொதுத்தேர்வில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்து இரண்டாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தமிழகம் வந்திருந்த ராஜீவ்காந்தி 1991 மே 21 -ம் தேதி மனித வெடிகுணடால் படுகொலை செய்யப்பட்டார். தேர்தல் முடிவில் பாஜக 120 இடங்களிலும் காங்கிரஸ் 222 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது .

1991 ஜூன் 21 -ல் காங்கிரஸ் கட்சியின் பி வி நரசிம்மராவ் பாரதப் பிரதமரானார்.

1991 டிசம்பர் 11 -ம் தேதி பாஜக கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரை நோக்கி தேசிய ஒருமைப்பாட்டு ரத யாத்திரை மேற்கொண்டது. 1992 டிசம்பர் 6 -ம் தேதி இராமஜென்ம பூமியில் இருந்த கட்டிடம் அகற்றப்பட்டது.

1996 -ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜக 161 இடங்களை பெற்று மக்களவையில் பெரும்பான்மை கட்சியாக இடம் பெற்றது. குடியரசு தலைவர் சங்கர் தயாள்சர்மா இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி வாஜ்பாய் அவர்களை அமைச்சரவை அமைக்க அழைத்தார். 15 நாட்களுக்குள் அவையில் தன் பெரும்பான்மையை நிரூபித்துக் கட்டவேண்டும் என்ற காலஎல்லையும் வகுத்தார்.

1996 மே 16 -ஆம் நாள் இந்தியத்தாயின் அருந்தவப் புதல்வன், அடல்பிஹாரி வாஜ்பாய் பாரதத்திருநாட்டின் பத்தாவதுப் பிரதமராக பதவியேற்றார். ஜனநாயகத்தின்மீது நம்பிக்கையுள்ளவர்கள் நாட்டைக்காக வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் ஆதரவு தருங்கள் என அழைப்புக்குரல் விடுத்தார்.

காங்கிரஸ் அல்லாத கட்சிகள் அதிகார ஆசையுடன் ஒருங்கிணைந்தன. காங்கிரஸ் கட்சியை தங்களோடு சேர்த்துக்கொள்ள அவை தயாராக இருந்ததை வாஜ்பாய் உணர்ந்தார். நாடாளுமன்றத்தை கூட்டமாலே 13 -ஆம் நாள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

வாஜ்பாய் பதவி ஏற்று 13 நாளில் ராஜினாமா செய்தது நாட்டுமக்களுக்கு ” எங்களாலும் ஆட்சி அமைக்க முடியும் ” என்னும் நல்ல செய்தியை வேண்டுதலுடன் விடுத்தது போலிருந்தது .

அதிகார ஆசை கொண்டவர்கள் அடுத்தடுத்து ஆட்சி அமைத்து 22 மாதங்களில் ஆட்சி இழந்தனர். இறுதியில் குடியரசுத்தலைவர் மக்களவை தேர்தலை அறிவித்தனர்.

1998 -ஆம் ஆண்டு பா.ஜ.க. புதிய கூட்டணியுடன் மக்களைச் சந்தித்தது. இந்த கூட்டணி 264 இடங்களில் வெற்றிபெற்றது . அதில் பா.ஜ.க 181 தேர்தலுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சி தன் 18 உறுப்பினர்களின் ஆதரவை அரசு வெளியிலிருந்து கொடுப்பதாகத் தெரிவித்தது. 1998 மார்ச் 19 அன்று வாஜ்பாய் 13 -ஆவது பிரதமராக மீண்டும் பதவியேற்றார். ஒளிர் தாமரை :

1998 -ல் மீண்டும் பாரதத் பிரதமராக வாஜ்பாய் பதவி ஏற்றிருந்த நிலையில் 13 மாதங்கள் கழிந்த நிலையில் அரசு மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி பிரதமர் வாஜ்பாயிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் படிக்கூறினார். நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் நம்பிக்கை வாக்கு கோரினார். பாராளுமன்றத்தில் வாக்களிக்கக் கூடாத ஒரிசா மாநில முதல்வர் ‘கிரிதர் கொமாங்’ வாஜ்பாய்க்கு எதிராக வாக்களித்தார். அவர் அளித்தது பாராளுமன்ற மரபுக்கு எதிரான ஓட்டு.

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு வீழ்த்தப்பட்டது. வாக்கெடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. நான் கண்ட ஒரு நிகழ்வு என் ஆழ்மனதில் அப்படியே பதிந்துள்ளது. இதோ அக்காட்சி: ஒருவாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு வீழ்ந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறும் காட்சி, வாஜ்பாயை எதிர்த்து வாக்களித்தவர்கள் சபையில் ஆணவம் கலந்த அகந்தையுடன் வெற்றிக்களிப்பில் அமர்ந்திருந்த லல்லு பிரசாத் யாதவின் கையைப்பற்றி முத்தமிட்டுச் சென்றது திரைப்படங்களில் பிரபல தாதாக்களின் கையைப்பற்றி சிறிய தாத்தாக்களும் அடியாட்களும் முத்தமிட்டுச் சென்றதை நினைவூட்டின. அதே நேரம் வாஜ்பாயின் திருமுகத்தில் இராமபிரானின் சிறப்புப் பண்பான சமநிலை அறத்தைக் காணமுடிந்தது . ஆம்
“மெய்த்திருப்பதம் மேவு என்ற போதினும்
இத்திருத்துறந்து ஏடு என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை
ஒத்திருக்கும் திருமுகத்தினை உன்னுவாள்”
என நம்பன் அசோகவனத்தில் சீதை இராமபிரானை நினைத்திருந்த காட்சியைக் கூறும் போது கூறுகின்ற அந்த சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்த முகத்தினைக் காணமுடிந்தது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. 13 -ஆவது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடந்து முடிந்தது. வாஜ்பாயின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 304 இடங்களில் வெற்றி பெற்று 13 .10 .1999 அன்று மீண்டும் வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றார். வாஜ்பாயின் இந்த அரசு 13 .05 .2004 வரை ஆட்சி செய்தது. இந்த ஐந்தாண்டுகள் மற்றும் அதற்கு முந்தைய 13 மாத ஆட்சி ஆகிய 6 ஆண்டுகால ஆட்சியும் ஒளிரும் பாரதம் உருவாக்கிய உன்னத காலமாக இருந்தது. தன் அடுத்த பிரதமரிடம் வாஜ்பாய் “வலுவான பாரதத்தை வளமான பொருளாதாரத்துடன் மேலும் பொருள் வளம் கொழிக்கும் சூழ்நிலையில் விட்டுச் செல்கிறோம். ஜனநாயக மரபுகளைக் கட்டிக்காத்து தேசத்தை ஆளுங்கள்” எனக்கூறும் அளவில் பாரதம் உருவாக்கப்பட்டிருந்தது.

அர்ப்பணத் தாமரை :- வாஜ்பாய் ஒரு பிறவிக் கவிஞர். அந்த பிறவிக் கவிஞருக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அவரது 21 கவிதைகளைக் கிரேக்க மொழியில் பெயர்த்து சைப்ரஸ் அதிபர் ‘கிப்காஸ் கிளரிடாஸ்’ 2001 -ம் ஆண்டு அக்டோபர் 8 -ம் தேதி வாஜ்பாய்க் குப்பரிசாத வழங்கினார் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தியை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

16.08.2018 அன்று தாமரை நாயகன் பாரதத்தலைவின் திருவடிகளில்
அர்ப்பணமானார். ஆம் வாஜ்பாய் அவர்கள் அமரராகி விட்டார்.

ஜெய்ஹிந்த்

– பொண்ணுலிங்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top