டிசம்பர் 25ம் நாள் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் ஆகும். அந்நாளை நல்லாட்சி தினமாக நாடு முழுவதும் நமது கட்சி சார்பில் கொண்டாடப்பட உள்ளது. மூன்று முறை பிரதமராக இருந்த தேசியவாதி, மனிதநேய மாமணி திருவாளர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். அவர், மத்திய பிரதேசம் -குவாலியரில் பிறந்தவர். எம்.ஏ., படித்தவர். சட்டம் பயின்றவர். சமஸ்கிருத்தில் புலமை பெற்றவர். பத்திரிக்கையாளர், கவிஞர், இசையில் ஆர்வம் காட்டியவர், சிறந்த சொற்பொழிவாளர், சமைப்பதிலும் வல்லுநர், ஆழமான அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர் வாஜ்பாய். அவரது செயல்களிலும், எண்ணங்களிலும் தேசப்பற்று கொப்பளித்தது.
தன் தாய் வீடான ஆர்எஸ்எஸ்ஸில், மனித பண்புகளை கற்றவர். சிறந்த நாடாளுமன்றவாதியான இவர், திருமணமே செய்து கொள்ளாமல், நாட்டுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த அற்புதமான சிந்தனையாளர். தன் வாழ்நாளில் யாருக்கும் தெரியாமல், தனது ஒரு சிறுநீரகத்தை, ஒரு இஸ்லாமிய குழந்தைக்கு கொடுத்து அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர். அவரைப் போய் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று சொல்லுவது எவ்வளவு பேதமை. பாராளுமன்றத்திற்கு 9 முறையும், மேலவைக்கு 2 முறையும் மக்கள் சேவகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 50 ஆண்டுகால பாராளுமன்ற அனுபவம் பெற்றவர். இந்தியாவின் பிரதமராக 1996ல் 13 நாட்களும், 1998 முதல் 1999 வரை 13 மாதங்களும், 1999-2004 வரை 5 ஆண்டுகளும் இருந்து நாட்டிற்கு வழிகாட்டியவர். அவர் காலத்தில்தான் நாடு முழுவதும் சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டன. நான்குவழிச் சாலைகள், ஆறுவழிச் சாலைகள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதே இவர் ஆட்சிக் காலத்தில்தான். மேலும், இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வைத்தவர். மொராஜ்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில், வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, அவர் போகாத வெளிநாடுகள் இல்லை எனலாம். அவர் காலத்தில், அந்த அளவிற்கு வெளிநாட்டு உறவு மேம்பட்டது.
வாஜ்பாய் உலகம் அறிந்த தலைவராக இருந்தாலும், ஆர்எஸ்எஸ்தான் அவரை பக்குவப்படுத்தியது. 1947ல் முழுநேர ஊழியராக இருந்தபோது, பண்பட்ட மனிதராக செதுக்கியது.. 1951ல் சியாம் பிரசாத் முகர்ஜியால் ஜனசங்கம் துவக்கப்பட்டபோது, ஜனசங்கத்திற்கு பணியாற்ற ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர்களாக இருந்த தீனதயாள் உபாத்தியாயா, அத்வானி, நானாஜி தேஷ்முக், வாஜ்பாய் ஆகியோர் உட்பட முக்கிய சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களது ஒத்துழைப்போடு பீடுநடை போட்டது அன்றைக்கு ஜனசங்கம்.
வாஜ்பாய் சொல்லாற்றலும், சிந்தனை கருத்துக்களும் இளைஞர்களை கவர்ந்திழுத்தன. வட மாநிலங்களில் இளைஞர்கள் அவர் பின்னால் அணி வகுத்தனர். அதன் விளைவாக நான்கு மாநிலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஒரே தலைவர் வாஜ்பாய் மட்டுமே. பின்னாளில் அவரது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் அவரை ஒரு சிறந்த பத்திரிக்கையாளனாக்கியது. பாரத தேசத்தை ஒரு வளமான, வலிமையான, ஒன்றுபட்ட, முற்போக்கான, நவீன, அறிவுமிக்க, பிறரின் ஊடுருவலை எதிர்க்கும் திறன்படைத்த, சர்வதேச சபைகளில் பணியாற்றும் வலிமை கொண்ட தேசமாக உருவாக்கும் வகையில், தனி மனிதர்களுக்கு சம வாய்ப்பினையும், சுதந்திரத்தையும் வழங்கும் ஓர் அரசியல் அமைப்பாக ஜனசங்கத்தை மாற்றியப் பெருமை வாஜ்பாயைச் சேரும்.
இந்திய அரசியல் களத்தில் காங்கிரசுக்கு மாற்றாக வளர்ந்த ஜனசங்கம், 1975ல் நெருக்கடி நிலை காலத்தில், இந்திராவின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்த நினைத்தது. அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஜனதா கட்சியை உருவாக்கியதில் பெரும் பங்காற்றியர் வாஜ்பாய். அன்றைக்கு கவர்ச்சிமிகு தலைவராக விளங்கிய வாஜ்பாயை நாளேடுகளும், ஊடகங்களும் பாராட்டின.
நாட்டின் நன்மைக்காக, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக, தனது கொள்கைகளை ஓரம் வைத்து விட்டு, தனது கட்சியையும் கலைத்து விட்டு, ஜனதாவில் ஐக்கியமானது ஜனசங்கம். அதன்பிறகு நடந்த தேர்தலில், 542 தொகுதிகளில் 298 இடங்களில் ஜனதா கட்சி கைப்பற்றி, ஆட்சி அமைத்தது. அதில் வாஜ்பாய் தலைமையிலான ஜனசங்கம்தான் 90 இடங்கைள பெற்று முன்னிலை வகித்தது. ஆனாலும், பிரதமர் பதவி கேட்டு வாஜ்பாய் போராடவில்லை. ஆட்சி அமைக்க இடையூறும் செய்யவில்லை. பழைய காங்கிரஸ் கட்சியை சார்ந்த எளிய மனிதர், நேர்மையின் சிகரம் மொரார்ஜி தேசாய்க்கு விட்டு கொடுத்த பெருந்தகையாளர் வாஜ்பாய். அந்த அமைச்சரவையில் கூட மூன்று இடங்கள் போதும் என்று சொன்னவர் வாஜ்பாய். பல்வேறு சித்தாங்களைக் கொண்ட கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் போதும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொண்டவர் வாஜ்பாய்.
ஆனாலும், ஜனதா கட்சியில் உள்ள தலைவர்களுக்கு ஜனசங்க உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால், அவர்களை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஜனதா கட்சியில் உள்ள ஜனசங்கத்தினர் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கு பெறக்கூடாது என பிரச்சனை எழுப்பினர். அப்போதுதான் வாஜ்பாயும், அத்வானியும் சேர்ந்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்தனர். அந்த முடிவுதான், பின்னாளில் ஆட்சி, அதிகாரத்தில் வலிமையாக கால் பதிக்கக் காரணமானது.
ஆர்எஸ்எஸ் உறவு என்பது எங்கள் தொப்புள் கொடி உறவு. தாய்க்கும் மகனுக்குமான உறவு. அந்த உறவுக்கு பங்கம் வருமானால், அதிலிருந்து வெளியேறுகிறோம் என்றனர் வாஜ்பாயும், அத்வானியும். ஜனதாவில் உள்ள தலைவர்களுக்கு இது ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் அப்போது ஜனசங்க பாராளுமன்ற உறுப்பினர்களே ஜனதாவில் அதிகம் இருந்தனர்.
ஆர்எஸ்எஸ்ஸா -ஜனதாவா என்ற கருத்து மோதலில்; ஆர்எஸ்எஸ்தான் முக்கியம் என ஜனதாவிலிருந்து வெளியேறி, 1980 ஏப்ரல் 6ம் தேதி பாரதிய ஜனதா கட்சி என்கிற புதிய அரசியல் கட்சியை துவக்கினார்கள் ஜனசங்கத்தினர். ஜனசங்கத்தின் மறு பதிப்பே பிஜேபி. அது இன்றைக்கு ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் முகமாக வளர்ந்து. நாட்டில் ஆட்சி, அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது.
வாஜ்பாயின் கருத்துக்களும், சிந்தனைத் துளிகளும் மக்களின் எண்ணங்களை பிரதிபலித்தது. அவரது பணிகளும், சொற்பொழிவுகளும் தேசப்பற்றை வெளிப்படுத்தின.
தொன்மையான இந்தியாவின் நாகரீக வளர்ச்சியிலும், நவீனம் மற்றும் மறுமலர்ச்சி திட்டங்களிலும் இவரது பங்கு மகத்தானது. இவர் செய்துள்ள மாற்றங்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் எழும் சவால்களையும் சமாளிக்க உதவியது.
ராஷ்ட்ர தர்மா, பாஞ்சஜன்யா, ஸ்வதேஷ் இந்தி நாளிதழ்களில் ஆசிரியாக பணியாற்றியவர் வாஜ்பாய். அவரது கட்டுரைகளும், சிந்தனை கருத்துக்களும் அதில் வியாபித்திருந்தன. பாராளுமன்றத்தில் அவரது ஆற்றிய சொற்பொழிவுகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. எமர்ஜியென்சியில் சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதைகள், அமர் ஆக் ஹை கவிதைகள் தொகுப்பு, அவரது எழுத்தாற்றலுக்கும், கவிதை புலமைக்கும் ஒரு சான்று.
இவரது பொருளாதாரக் கொள்கைகள், சுதந்திர இந்திய வரலாற்றில், நீடித்த வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கின.. தேசிய நெடுஞ்சாலைகள், தங்க நாற்கரச் சாலைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தன. இந்திய மண்ணில் ஊடுருவியர்களை விரட்டி அடித்து, கார்கில் போர் மூலம் தனது இறையாண்மையை நிலைநாட்டியதில் வாஜ்பாயின் தீர்க்க தரிசனம் வழிகாட்டியது.
அவரது ஆட்சிக் காலத்தில் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்தது. உலகில் மந்தநிலை இருந்த போதிலும், இந்தியா 5.8% ஜிடிபி வளர்ச்சியை எட்டியதை உலகம் பாராட்டியது. இவரது அரசு எடுத்த துணிச்சலான முடிவுகள், மேம்படுத்தப்பட்ட திட்டங்கள், இந்தியாவை வலுவான பொருளாதார சக்தியாக மாற்றியது.
பொக்ரான் அணுகுண்டு சோதனை ஒரு வரலாற்று சாதனை. அமெரிக்க நாசா விஞ்ஞானிகளுக்கு கூட தெரியாமல் நடத்தப்பட்ட இந்த சோதனையை நாம்தான் முதலில் உலகுக்கு சொன்னோம். மேற்கத்திய நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தன. இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. அதையும் மீறி, அவரது காலத்தில் இந்தியாவை அணு ஆயுத நாடாக உருவாக்கிய பெருமை வாஜ்பாயை சேரும். இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியை 3% இருந்து 70% உயர்த்தியது, தொலைத் தொடர்பு துறையில் மிகப் பெரிய புரட்சி எனலாம்.
ரைட் டூ எஜிகேஷன் இன் இந்தியா என்ற திட்டத்தை, சர்வ சிக்ஷா அபியான் (அனவைருக்குமான கல்வி) என்ற பெயரில், இந்தியா முழுக்க அமுல்படுத்தியது கல்வித்துறையில் பெரிய மாற்றமாக கருதலாம்.
பிராந்திய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீனாவுடனான வணிகத்தை மேம்படுத்தினார். இந்தியாவில் முதன்முதலில் மெட்ரோ ரயில் திட்டத்தை டெல்லியில் கொண்டு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் வாஜ்பாய்.
இந்தியா சந்திரனில் கால்பதிக்க விண்கலம் அனுப்ப இருக்கிறது என பெருமையுடன் சொன்னவர் வாஜ்பாய். அதன் விளைவாகவே இஸ்ரோ சந்திராயன் திட்டத்தை உருவாக்கியது. இந்தியாவில் முதன்முதலில் உலகத் தரமான நெடுஞ்சாலைகளை உருவாக்கி, தங்க நாற்கரச் சாலைகள் பெயரில், 49,260 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தது இவரது ஆட்சி காலத்தில்.. இந்திய அரசியலில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு அரசை ஐந்தாண்டுகள் முழுமையாக வழிநடத்திய பெருமை வாஜ்பாய்யை நினைவுப் படுத்தும். அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைக்காக, 1992ல் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 1991ல் சிறந்த நாடாளுமன்ற விருதும் வழங்கப்பட்டது. மேலும், லோகமான்ய திலக் புருஸ்கார் விருதும், பாரத ரத்னா விருதும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது.
1984ல் இரண்டு இடங்களை மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா, பிற்காலத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருப்பதற்கும், பொருளாதாரத்தில் உலகில் 5வது இடத்தை பிடிப்பதற்கும், உலகின் வலிமையான தலைவர்கள் வரிசையில் மோடி முதல் இடத்தை பிடித்ததற்கும், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் தீர்க்கதரிச வெளிப்பாடே அன்றி வேறில்லை.
வாழ்க வாஜ்பாய்; வளர்க அவரது மனித நேயம்.
–கவிஞர் சுராகி