மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம்

விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி ஐயா எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டார் என (ஜனவரி 30) மதுரையில் விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் தலைவர் அண்ணாமலை கூறினார்.

டங்ஸ்டன் திட்டம் வராமல் தடுத்து நிறுத்தியதற்கான பாராட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்த மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் தலைவர் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் செயல்படுத்தப்படவிருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. இதனையடுத்து அரிட்டாப்பட்டி கிராம மக்கள் தமிழக பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் அ.வல்லாளப்பட்டியில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை சென்றனர். விமான நிலையத்தில் இருந்து அரிட்டாபட்டி சென்ற அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து மதுரை அ.வல்லாளப்பட்டியில் நடைபெறும் பாராட்டு விழாவில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

இன்று மத்திய அரசு சார்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஐயாவின் சார்பாக சுரங்கத்துறை அமைச்சர் அருமை அண்ணன் கிஷண் ரெட்டி அவர்கள் நமது மதுரை மண்ணுக்கு வருகை புரிந்திருக்கிறார்கள். இதற்காக நீங்கள் ஆச்சரியப்படலாம். நேற்று நமது மத்திய அமைச்சரவையில் கனிம வளத்திற்காக 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளனர். நாடு வளர வேண்டும் வளர்ச்சி அடைய வேண்டும்.

நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்தான். இங்கு கூடியுள்ள அனைவரும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள்தான். நமது குழந்தைங்கள் எத்தனை பேர் விவசாயம் செய்வார்கள் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆனால் அவர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த மண்ணுக்கு வந்து பார்த்தால் தெரியும் ஐயா. முல்லைப்பெரியார் அணையின் பாசனம் ஒருபோக விவசாயம் எல்லாம் இடத்திலும் இருக்கிறது.

250க்கும் மேற்பட்ட கோவில்கள் இந்த மண்ணில் உள்ளது. எல்லாவற்றையும் தாண்டி இந்த மண்ணை காக்கக்கூடிய கள்ளழகர் கோவில் உள்ளது. இந்தப்பகுதியில் உள்ள எல்லோரும் கொஞ்சம் மனசு கஷ்டப்பட்டீர்கள். கிட்டத்தட்ட 5000 ஏக்கரில் டங்ஸ்டன் எடுக்கப்போகிறார்கள் என மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டனர்.

ஒரு விஷயத்தை நாம் நல்லா புரிந்துக்கொள்ள வேண்டும். மோடி ஐயா எப்போதுமே தமிழகத்துக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர மாட்டார். அது மோடி ஐயாவின் ரத்தத்தில் கிடையாது. மீத்தேன் திட்டம் சம்மந்தமே இல்லை. நமக்கு முன்பு இருந்த அரசு கையெழுத்து போட்டார்கள். நாம் பதவிக்கு வந்த பிறகு அது டெண்டர் ஆச்சு. அப்படி இருந்து தஞ்சாவூர் பகுதியில் உள்ள பெருமக்கள் சொன்னார்கள். எங்களுக்கு மீத்தேன் திட்டம் , ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்று கூறினார்கள்.

அப்போது இரண்டு நாட்களில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்லோரும் டெல்லிக்கு சென்று மீத்தேன், கார்பன் திட்டத்தை நிறுத்திவிட்டனர்.

இன்றைக்கு வந்துள்ள டங்ஸ்டன் திட்டம் கூட டெல்லியில் அமைச்சரவையில் உள்ள கிஷண் ரெட்டி அவர்களுக்கோ, மத்திய அமைச்சரகத்தில் உள்ள செயலாளர்களுக்கோ மேலூரை சுற்றியுள்ள பகுதி எப்படிப்பட்ட பகுதி என்று அவர்களுக்கு தெரியாது. யாரும் வந்து இங்கே பார்க்கப்போவதும் கிடையாது. எந்த அளவிற்கு இப்பகுதியில் பாசனம் வசதி இருக்கிறது, 250 கோவில் இருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு பழமையான சமணர் படிநிலை உள்ளது. தமிழ் பாரம்பரியத்தின் சான்றாக இருக்கக்கூடிய சுவடுகள் எல்லாம் இப்பகுதியில் உள்ளது. இவை எதுவுமே அவர்களுக்கு தெரியாது.

அதனால் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை. 15.09.2023ஆம் ஆண்டில் மத்திய அரசு கடிதம் எழுதுகிறது. மேலூர் பகுதியில் டங்ஸ்டன் இருக்கிறது. இதுதொடர்பாக ஏலம் விடப்படுகிறது என மாநில அரசுக்கு மத்திய அரசு அறிக்கை கொடுத்துள்ளது. இதுபற்றிய கருத்துக்களை கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இங்க உள்ள மாநில அரசு கடிதம் போடுகிறது. அதில் இங்க மதுரை மேலூர் பகுதியில் இருக்கக்கூடிய 4890 ஏக்கரில் வெறும் 477 ஏக்கர் மட்டுமே பல்லுயிர் பூங்கா. மிச்சத்தில் எதுவுமே இல்லை என்று கடிதத்தில் குறிப்பிடுகிறது. இதனால் டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. சரி மாநில அரசு சொல்லியிருக்காங்க 477 ஏக்கர் மட்டும்தான் விவசாய பூமியாக இருக்கிறது. மிச்சம் ஏக்கரில் கோவிலைப்பற்றி யாரும் சொல்லவில்லை, ஒருபோகம் விவசாயத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை.

பெரியார் அணையில் இருந்து வரக்கூடிய நீர்ப்பாசணத்தை பற்றி யாரும் சொல்லவில்லை. அவங்களுக்கு என்ன தெரியும். அதன் காரணமாக மத்திய அரசு டெண்டர் விடுகிறது. முதல்முறை 2024 ஏப்ரல் மாதத்தில் விடப்பட்ட டெண்டரை யாருமே எடுக்கவில்லை. அப்பொழுதும் மாநில அரசுக்கு தெரியும்.மீண்டும் 2024 ஜூன் மாதம் மறுபடியும் டெண்டர் விடப்படுகிறது. அப்பொழுதும் மாநில அரசுக்கு தெரியும்.
அது நவம்பர், டிசம்பர் மாதத்தில் அந்த டெண்டரை எடுத்த பிறகுதான் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். இங்குள்ள பேராசிரியர் ராமஸ்ரீனிவாசன், கதளி நரசிம்ம பெருமாள், ராஜசிம்மன், ராஜசக்ரவர்த்தி, சிவலிங்கம் உள்ளிட்டோருக்கு தெரியும்.

இதற்கு இடையே நீங்கள் எல்லாம் ஒரு அறவழிப்போராட்டம், இந்தியா வே திரும்பிப்பார்க்கும் வகையில் ஒரு கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களின் போராட்டம். என்ன சொல்வார்கள் என்றால் கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் படிக்காதவர்கள். 12 அம்பலக்காரர்கள் ஐயா இங்கிருந்து டெல்லிக்கு வந்தனர். 12 பேரில் 11 பேருக்கு டெல்லி வடக்கு இருக்கா, தெற்கு இருக்கா என்பது தெரியாது. டெல்லியை பார்த்ததே இல்லை. முதல்முறையாக அம்பலக்காரர்கள் ஐயா அனைவரும் விமானத்தில் ஏறி டெல்லிக்கு வருகின்றனர்.

மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி ஐயா அவர்களின் அலுவலகத்திற்கு அனைத்து அம்பலக்காரர்களும் சென்று ஒரு மணி நேரம் இருக்கின்றனர். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் அனைவரும் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். ஒரு சிலர் அமைச்சரை தமிழில் பேசி புரிய வைக்கின்றனர். இங்கிருக்கும் அம்பலக்காரர் ஐயா அமைச்சருக்கு ஆங்கிலத்தில் பேசி புரியவைக்கிறார். எங்க ஊரு இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஊர் மற்றும் நீர் பாசனம் உள்ளிட்ட அனைத்தையும் பேசுகிறார்.

அமைச்சர் அவர்கள் அனைத்தையும் கேட்டு விட்ட ஒரே ஒரு வார்த்தை மட்டும் கூறுகிறார். நான் உங்கள் அனைவருக்கும் உறுதி கொடுக்கிறேன். குளிரில் ஏன் டெல்லியில் இருக்கின்றீர்கள். 2 டிகிரி குளிர் இருக்கிறது எனவே ஊருக்கு புறப்பட்டு செல்லுங்கள் என்கிறார். நாளைக்கு மோடி ஐயா கிட்ட பேசி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து கொடுத்து விடுகிறேன். அதற்கு அம்பலக்காரர் ஐயா சொன்னார், நாங்கள் ஊருக்கு எல்லாம் புறப்பட்டு செல்ல மாட்டோம் ஏன் என்றால் ஊர் மக்கள் அனைவருக்கும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்துவிட்டுத்தான் திரும்புவோம் என்று கூறியுள்ளோம். எனவே ரத்து செய்ததற்கான ஆர்டர் போட்டு கையில் கொடுத்தால் மட்டுமே நாங்கள் அனைவரும் ஊருக்கு போவோம் என்றனர். அது அம்பலக்காரர் ஐயாவின் பெருந்தன்மை.

அமைச்சரின் பெருந்தன்மை என்னவென்றால் சரி பரவாயில்லை ஊருக்கு போக வேண்டாம். நீங்கள் ஓட்டலில் தங்க வேண்டாம் என்கூட வந்து என் வீட்டிலேயே தங்கிக்கொள்ளுங்கள் என்றார்.

அதே நேரத்தில் ஒரு மத்திய அரசு அறிவித்த திட்டத்தை ரத்து செய்வது அவ்வளவு எளிதல்ல. அதற்கு கேபினட் ஒப்புதல், அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். கேபினட் செயலாளர்கள் வரைக்கும் போக வேண்டும். அம்பலக்காரர்கள் அனைவரும் மத்திய அமைச்சரை பார்க்கும்போது 3.30 மணி, 24 மணி நேரத்திற்குள் அதாவது அடுத்த நாள் காலை டங்க்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக ரத்து செய்து மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி ஐயா அறிவிப்பு வெளியிட்டார்.

விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்த்து நீங்கள் சொல்கிறீர்கள், உங்கள் மண் உங்கள் கையை விட்டு போய்விடக்கூடாது என்று மோடி ஐயா எடுத்த முடிவு.

எத்தனையோ இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். சில ஆர்ப்பாட்டங்கள் நியாயமான ஆர்ப்பாட்டங்கள், சில நியாயம் இல்லாதவை. அரசியலில் நாம் பார்க்கிறோம். ஆனால் அரிட்டாப்பட்டி மக்களின் ஆர்ப்பாட்டம் 100 சதவீதம் நியாயமான, நேர்மையான ஆர்ப்பாட்டம் ஆகும். லட்சக்கணக்கான மக்கள் திரண்டு 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரையில் உள்ள தபால் நிலையம் வரை அமைதியான முறையில் சென்று தங்களது கோரிக்கையை எடுத்துரைத்தனர். கட்டுக்கோப்பாக இந்த மண்ணுக்காக நீதிக்கான போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

எப்படிங்க மோடி ஐயா உங்களுக்கு செய்ய மாட்டார் என்று யோசிச்சு பாருங்க.. அதனால் நமது பாரதப்பிரதமர் நரேந்திர மோடி ஐயா எப்போதும் மக்களாக மக்கள் கலந்து இருப்பவர். தமிழகம் மட்டுமின்றி வேறு எத்தனையோ மாநிலங்களில் பிரச்சனைகளை கொண்டு செல்லும்போது உடனுக்குடன் தீர்வு காண்கிறார் பிரதமர்.

இன்று கிஷண் ரெட்டி ஐயா வரும்போது கேட்டார். ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு ஜல்லிக்கட்டு மாடு இருக்கிறதே என்று. நான் சொன்னே ன் சாப்பிடுகிறோமோ இல்லையோ ஜல்லிக்கட்டு மாடுக்கு உணவளிப்போம். அதன் பிறகே இந்த மண்ணில் மக்கள் சாப்பிடுவார்கள் என்று சொன்னேன். அது சின்ன பெண்ணாக இருந்தாலும் ஜல்லிக்கட்டு மாட்டை கண்ணை பார்த்து நிறுத்தும் திறமை இந்த மண்ணுக்கு உண்டு.

அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டையும் திரும்பி கொண்டு வந்தது நரேந்திர மோடி ஐயாவின் அரசு. இவை எல்லாம் நாம் யோசிச்சு பார்க்க வேண்டும்.

நமது கட்சிக்கிட்ட ஒரு ஊடகம் இல்லை. காலையில் இருந்து இரவு வரை சூரியன் ஏன் உதிக்கிறது மாநில அரசு இருக்கிறது என்பதால் உதிக்கிறது. சூரியன் ஏன் மறைகிறது என்றால் மாநில அரசு இருப்பதால்தான். நாங்கள் எல்லாம் பொய்யை சொல்லத்தெரியாது. உண்மையை மட்டும் நேர்மையாக மக்களுக்காக பேசக்கூடியவர்கள் நமது மத்திய அரசின் கட்சியில் உள்ளவர்கள்.

இந்தியாவில் பாராட்டு விழாவுக்காக பாரதிய ஜனதா கட்சி எங்கேயும் போகாது. எங்கேயாவது பாராட்டு விழா நடத்தியிருக்கிறோமா பாருங்கள். எதற்காக ஐயா கிஷண் ரெட்டி இங்கே வந்திருக்கிறார் என்றால் அம்பலக்காரர் ஐயா அன்று சொன்னார். உங்களை தேடி வந்தோம் எங்களுக்கு மரியாதையாக, சமமாக உட்கார வைத்து உபசரித்தீர்கள். எனவே எங்களுக்காக எங்கள் கிராமத்திற்கு வரவேண்டும். நாங்கள் உங்களுக்கு உபசரிக்கிறோம் என அம்பலக்காரர் ஐயா கூறினார். கிஷண் ரெட்டி ஐயா இன்று இங்கே வந்தது பாராட்டு விழாவிற்காக அல்ல, எங்களின் கடமையை செய்துள்ளோம் அவ்வளவுதான். மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top