இந்தியாவின் வளர்ச்சி பாதை வழங்கும் எண்ணற்ற வாய்ப்புகளை கருத்தில் கொண்டு பிரான்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாரிஸில் நடைபெற்ற 14-வது இந்தியா-பிரான்ஸ் சி.இ.ஓ. கருத்தரங்கில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியாவுக்கு வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று உங்களிடம் கூறிக் கொள்கிறேன். ஒவ்வொருத்தரின் வளர்ச்சியும், இந்திய வளர்ச்சியுடன் இணைந்துள்ளது.
இதற்கு சிறந்த உதாரணம் ஏவியேஷன் துறையில் தெளிவாக காணப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் விமானங்களுக்கு முன்பதிவு செய்துள்ளன. மேலும், நாங்கள் தற்போது 120 புதிய விமான நிலையங்களை திறக்க இருக்கிறோம். இதை வைத்து எதிர்கால சாத்தியக்கூறுகளை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
‘‘இந்தியாவின் வேகமும் பிரான்சின் துல்லியமும் இணையும் போது; பிரான்சின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணையும் போது… வணிக நிலப்பரப்பு மட்டுமல்ல, உலகளாவிய மாற்றமும் ஏற்படும். இந்தியாவும் பிரான்சும் ஜனநாயக முறையில் மட்டுமே இணைக்கப்படவில்லை. நமது நட்பின் அடித்தளம் ஆழ்ந்த நம்பிக்கை, புதுமை மற்றும் பொது நலனை அடிப்படையாகக் கொண்டது. நமது கூட்டாண்மை இரண்டு நாடுகளுக்கு மட்டும் குறுகி இருக்கவில்லை,’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.