பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சென்றடைந்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான இந்திய வம்சாவளியினர் குவிந்து பிரதமர் நரேந்திர மோடியை உற்சாகமாக வரவேற்றனர். ‘பாரத் மாதா கி ஜே’, ‘வந்தே மாதரம்’ என முழங்கியும், ‘மோடி, மோடி’ என கோஷமிட்டும் வரவேற்றனர். இந்த வரவேற்பால் நெகிழ்ந்து போன பிரதமர் நரேந்திர மோடி, மனமகிழ்ச்சியுடன் அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து அமெரிக்க புலனாய்வுப்பிரிவு தலைவர் துளசி கப்பாட், தொழிலதிபர் எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும் பிரதமர் மோடி சந்தித்தார். வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி, அவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
அப்போது அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது: இந்தியாவுக்காக மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய இருக்கிறது. அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அவர்கள் (இந்தியா) கொள்முதல் செய்ய இருக்கிறார்கள். பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர். மிகச்சிறப்பாக செயல்படுகிறார். இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும். பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வர்த்தகம் தொடர்பாக நாங்கள் பேச இருக்கிறோம். பல விஷயங்கள் பற்றி பேச இருக்கிறோம்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். இந்திய மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க வாய்ப்பளித்துள்ளனர். நமது இரு நாடுகளின் முன்னேற்றம் மற்றும் செழுமையை நோக்கி நாம் ஒன்றாகப் பயணிப்போம். உலகின் மிக பழமையான ஜனநாயக நாடாக அமெரிக்கா உள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆகும். எனவே, இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து வரும் போது மிக்கப்பெரிய பலம் பெறும். மனித குலத்தின் நலனுக்காக நாங்கள் பணியாற்றுவோம்’’ என்றார்.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக் கொள்ள தயார்.
நான் எப்போதும் ரஷ்யா, உக்ரைனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன்; இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துள்ளேன். பலரும் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையோடு இருப்பதாக தவறாக நினைக்கிறார்கள், உண்மையில் இந்தியா அமைதியின் பக்கமே நிற்கிறது.
இது போருக்கான நேரமில்லை என்பதை நான் புதினிடமே தெரிவித்துள்ளேன்; இன்றும் கூட, தீர்வுகளை போர்க்களத்தில் காண முடியாது என்பதே எனது நம்பிக்கை. இரு நாடுகளும் (ரஷ்யா மற்றும் உக்ரைன்) கலந்து கொள்ளும் மன்றத்தில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்படும்போதுதான் போருக்குத் தீர்வு காண முடியும் என்று இந்தியா நம்புகிறது.
போர் நிறுத்தத்திற்காக அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். கூடிய விரைவில் அம்முயற்சியில் அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்’ என்று பிரதமர் மோடி கூறினார். இந்த சந்திப்பின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.