தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி மூன்றாவது முறையாக உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தொன்மை, நாகரீக பிணைப்பை கொண்டாடுவதையும், வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட கலாச்சார நிகழ்வாகும்.
இரண்டு பகுதிகளையும் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள், தத்துவ ஞானிகள், வணிகர்கள், கலைஞர்கள், கைவினைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பங்களிக்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து 1000 பேர் பங்கேற்கின்றனர். மகா கும்பமேளாவுடன் இணைந்து நடப்பதால் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தனி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 21) நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா, தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதுகுறித்து தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: இன்றைய மாலை, உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில், மாண்புமிகு மத்திய மருத்துவத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா அவர்கள், மற்றும் உத்திரப் பிரதேச மாநில அரசு அதிகாரிகள் அனைவருடன் கலந்து கொண்டதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
கடந்த 2022 ஆம் ஆண்டு, காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பை மையப்படுத்தித் தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, மூன்றாவது ஆண்டாக, இந்த வருடம், கயிலை மலையில் இருந்து தமிழகத்தின் பொதிகை மலைக்கு வந்த அகத்திய மாமுனிவரைப் போற்றும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம், அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை, காசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதிக்கு இருக்கை என, தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.
இன்று, தமிழகத்தில் இருந்து நமது சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த தாய்மார்கள், சகோதரிகள், முத்ரா திட்டத்தின் பயனாளிகள் என 200 பேர், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சொந்தத் தொகுதியான வாரணாசியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது, அனைவருக்கும் மன நிறைவாக அமைந்தது. இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.