முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே. அத்வானிக்கு, பாரத ரத்னா விருதை வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு கௌரவித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், மிகமுக்கியமானது 4 விருதுகள் தான். அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா.
இதில், ‘பாரத ரத்னா’ விருதுதான் நாட்டிலேயே மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜனாதிபதி மாளிகையில் (மார்ச் 31) நடைபெற்ற நிகழ்ச்சியில், நான்கு தலைவர்களின் குடும்பத்தினரிடம் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வயது மூப்பின் காரணமாக, மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்கவில்லை.
இதனையடுத்து எல்.கே. அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று, பாரத ரத்னா விருதை வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு கௌரவித்தார்.
அப்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.