மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது துணிச்சலாக போராடிய சதானந்த் என்.ஐ.ஏ. தலைவராக பதவியேற்பு!

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) புதிய தலைவராக சதானந்த் வசந்த் ததே (57) பதவியேற்றார். கடந்த 2009-ம் ஆண்டு என்ஐஏ தொடங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த புலனாய்வு அமைப்பு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. தீவிரவாதம் உள்ளிட்ட மிக முக்கிய வழக்குகளை என்ஐஏ விசாரணை நடத்துகிறது.

இந்த அமைப்பின் தலைவராக இருந்த தினகர் குப்தா கடந்த 31-ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து என்ஐஏவின் புதிய தலைவராக, மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் சதானந்த் வசந்த் ததேவை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. டெல்லியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்தில் அவர் நேற்று (ஏப்ரல் 01) பதவியேற்றுக் கொண்டார். வரும் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31 வரை அவர் பதவியில் நீடிப்பார்.

மகாராஷ்டிர ஐபிஎஸ் அணியை சேர்ந்தவர் சதானந்த் வசந்த் ததே. கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலின்போது அவரது தலைமையிலான போலீஸார், சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப், இஸ்மாயில் ஆகியோர் காமா மருத்துவமனை பகுதிக்கு தப்பிச் சென்றனர்.

அவர்களை பின்தொடர்ந்து சென்ற ததே, மருத்துவமனை வளாகத்தில் துணிச்சலாக முன்னேறினார். அப்போது தீவிரவாதிகள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசினர். இதில் ததே மிகக் கடுமையாக காயமடைந்தார். ஆனாலும் அவர் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிவிடாதபடி அவர்களை நோக்கி தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் பயங்கரவாதிகளுடன் போரிட்ட அவர் அதிக ரத்தத்தை இழந்து மயங்கி விழுந்தார். அதற்குள் போலீஸ் படை விரைந்து வந்து ததேவை பத்திரமாக மீட்டது. இதற்காக அவருக்கு ஜனாதிபதியின் வீர, தீர விருது வழங்கப்பட்டது. ஏற்கெனவே சிபிஐ, சிஆர்பிஎப் உள்ளிட்ட மத்திய படைகளில் ததே பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top