கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக நடக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம், 100 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என அறிவித்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப்ரவரி 17ம் தேதி நடந்தது. திமுக அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், சத்திய ஞானசபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க பா.ஜ.,க.,- பா.ம.க., ஹிந்து முன்னணி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதை மீறி, வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அஸ்திவாரம் தோண்டப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்திவாரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட, பார்வதிபுரம் கிராம மக்கள் 161 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், ‘வள்ளலார் சத்திய ஞானசபை தலை. அதை ஒட்டிய உடல் பெருவெளி. இதில், பெரிய பொக்லைன் வைத்து வெட்டி குதறுவது என்ன நியாயம்? வள்ளலாரின் ஆன்மிக தத்துவத்திற்கு எதிரானது. வடலூர் சத்திய ஞான பெருவெளியை தமிழ்நாடு ஆட்சியாளர்கள் சிதைப்பது சமூக நம்பிக்கைக்கு எதிரான வன்முறை’ என, வள்ளலார் பணியகம் மற்றும் தெய்வத்தமிழ் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.