டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில், தெலங்கானா மாநில பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், திகார் சிறையில் உள்ள கவிதாவை சிபிஐ அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 11) கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் உள்ள கவிதாவிடம் திகார் சிறையில் வைத்து கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் திகார் சிறையில் உள்ள கவிதாவை கைது செய்வதாக சிபிஐ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.