2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்ரல் 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை ‘சங்கல்ப் பத்ரா’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி; தேர்தல் அறிக்கை தயாரிப்பில் லட்சக்கணக்கான மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்து தங்களது கருத்துகளை தெரிவித்து இருந்தனர். பா.ஜ.க., தேர்தல் அறிக்கைக்காக நாடு முழுவதும் மக்கள் காத்திருந்தனர். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோரை மையமாக கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான அகமதாபாத் – மும்பை புல்லட் ரயிலின் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அத்திட்டம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்த திட்டத்தை போல் வட இந்தியாவில் ஒரு புல்லட் ரயிலும், தென்னிந்தியாவில் ஒரு புல்லட் ரயிலும், கிழக்கு இந்தியாவில் ஒரு புல்லட் ரயிலும் இயக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு பணிகளும் விரைவில் தொடங்கும்” என்று அறிவித்தார்.
“தமிழ் மொழி எங்களின் பெருமை. அதன் பெருமையை உலகளவில் உயர்த்த பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். வளர்ச்சி மற்றும் மரபு என்ற மந்திரத்தில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை உருவாக்குவோம்” என்று கூறினார்.