மக்களவைத் தேர்தலுக்கு வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்பட்ட சென்னை, முகப்பேரில் உள்ள பள்ளியின் அவலநிலையைக் காண்பிக்கும் வகையில், ஐந்து வயது சிறுமியின் வீடியோ வைரலானது.
இதனைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகளும் 92வது வார்டு கவுன்சிலர் திலகரும் இணைந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை மிரட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் கமிட்டி தலைவர் மற்றும் கல்வியாளர் ஒருவரின் உதவியுடன் அவலநிலையை வெளிக்கொண்டு வந்ததற்காக மிரட்டப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் உட்பட 102 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதே போன்று சென்னை, முகப்பேரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவுக்காக வந்திருந்த அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியின் முகவர்கள் சாப்பிட்ட கவர்களை ஆங்காங்கே வீசியிருந்தனர். இதனை அப்பள்ளியில் யுகேஜி படித்த ஐந்து வயது சிறுமி பார்த்து வேதனை அடைந்தார்.
இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். என்ன பண்ணி வச்சிருக்கீங்க, சாப்பிட்ட கவர்களை குப்பைத்தொட்டியில் போட மாட்டீங்களா; குடித்த குளிர்பானக் கேன்களை ஆங்காங்கே வீசியுள்ளனர். மேலும் பள்ளியின் சிலாப்களையும் உடைத்திருக்கீங்களே என்று சுட்டிக்குழந்தையின் வார்த்தைகளால் அதிகாரிகளை துவைத்து எடுத்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதன் பின்னரே அப்பள்ளியில் தூய்மைப்பணிகள் நடைபெற்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக அரசு அதிகாரிகள் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் அப்பள்ளியின் ஆசிரியர்களை மிரட்டியுள்ளனர்.
இது குறித்து குழந்தையின் தாய் ரம்யா பாலா கூறுகையில், ‘‘உடைந்த பலகைகள் கொண்ட வகுப்பறை எனது குழந்தைக்கு சொந்தமானது, இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால், வீடியோ பதிவு செய்து பகிர்ந்தோம். ஆனால், கவுன்சிலரும், கல்வித்துறை அதிகாரிகளும் நாங்கள் அரசுக்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்” என்றார். மேலும் கல்வி அதிகாரிகளும், கவுன்சிலரும் மிரட்டுகின்றனர் என்றார்.
ஒரு குழந்தையின் வீடியோவை பார்த்து பயப்படும் நிலையில்தான் இந்த திராவிட மாடல் அரசு உள்ளது. போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை பிடிக்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பள்ளியின் அவலம் குறித்து வீடியோ வெளியிட்ட குழந்தையின் பெற்றோரை மிரட்டுவது என்ன மாதிரியான ஆட்சி என்பது தெரியவில்லை என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர்.