அயோத்தி ராமர் கோவில் கருவறைக்கு சென்று ஜனாதிபதி திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். கோவில் அறக்கட்டளை சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் திறக்கப்பட்ட மறுநாள் ஜனவரி 23ஆம் தேதி முதல் பக்தர்கள் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து குழந்தை ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் அரசியல் தலைவர்கள் செல்ல வேண்டாம் , குறிப்பாக பாஜகவினர் யாரும் ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டாம், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் ராமர் கோவிலுக்கு செல்லாமல் இருந்தனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு முதன் முறையாக ராமர் கோவிலுக்கு நேற்று (மே 01) சென்றார். அயோத்தியில் உள்ள மகரிஷி வாத்மிகி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் வரவேற்றார்.
தொடர்ந்து அங்குள்ள ஹனுமன் கர்ஹி கோவிலுக்கு சென்ற திரௌபதி முர்மு தீப ஆரத்தியும் காண்பித்து வழிபட்டார். பின்னர் சரயு நதி கரையில் நடந்த ஆரத்திகளிலும் அவர் பங்கேற்றார். குழந்தை ராமர் கோவிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கருவறைக்கு சென்று குழந்தை ராமரை தரிசனம் செய்தார். குழந்தை ராமரை வணங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையின் விழாவில் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீலிக்கண்ணீர் வடித்தது. தற்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு ராமரை தரிசனம் செய்த வீடியோவை பார்த்த எதிர்க்கட்சிகள் பொறாமையில் தேர்தலுக்காக வந்தார் என்று அப்பட்டமான பொய்யை பரப்பி வருகின்றனர்.